திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், ஈஸ்வரனின் கொமதேகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னமும் 3 நாட்களே உள்ளதால், இன்றைக்குள் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட வேண்டும் என்று திமுக தலைமை உறுதியாக இருந்தது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் சிறிய கட்சிகளான தமிழர் வாழ்வுரிமை கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடும்.
அதேபோல், ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கும் ஒரு தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகலும் கையெழுத்திட்டன. அதேநேரம், கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. கொ.ம.தே.க. சார்பாக ஈஸ்வரன், சக்திகோச் நடராஜன், தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்ற்றனர்.
பேச்சுவார்த்தையின் போது, கொமதேக தரப்பில் 5 இடங்களை கேட்டதாகவும் திமுக 2 இடங்களை ஒதுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொமதேக தலைவர் ஈஸ்வரன் உடன்பாடு எட்டப்படவில்லை. எத்தனை தொகுதிகள் என முடிவாகவில்லை என்றார். மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவோமா என்று கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டுச் சென்றது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.