ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்று மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக ஆலை நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
முன்னதாக தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன . இந்த நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புரோகிளிண்டன் ஆரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு நடைபெற்றது.
வழக்கில் இன்னும் பல்வேறு முக்கிய அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதாக வாதிட்ட ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியது.
இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் வேதாந்தா நிறுவனத்தின் மனு மீது தமிழக அரசு ஊழியர் எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.






