செல்லும் இடமெல்லாம் வரவேற்பு… ஆரவாரத்தால் திணறிய செல்வராஜ்!
பிரச்சாரத்தின் போது, வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்த செல்வராஜ்.
திருப்பூர்: பல்லடம் சட்டசபை தொகுதி தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், தி.மு.க வேட்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., தொகுதியை ஒரு வழி பண்ணி வருகிறார். மத்திய மாவட்ட பல்லடம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிபாளையம், பூமலூர், கோபக்காடு, தேவராம் பாளையம் எனப் பட்டிதொட்டியெங்கும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் பணியில் அவர் வேகம் காட்டி வருகிறார்.
செல்வராஜ் செல்லும் கிராமங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்து, ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கலைஞர் நகர், இச்சிப்பட்டி மற்றும் பெத்தாம் பூச்சிப்பாளையம் பகுதிகளில் வேட்பாளர் செல்வராஜ் வீதி வீதியாகச் சென்றபோது, அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. தாரை தப்பட்டை முழங்க, தொண்டர்களின் உற்சாகக் கோஷங்களுக்கு மத்தியில் மக்களிடம் வாக்கு சேகரித்த அவர், பொதுமக்களின் கைகளைப் பற்றி குறைகளைக் கேட்டறிந்தார்.

பிரச்சாரத்தின் போது எழுச்சியுடன் பேசிய செல்வராஜ் எம்.எல்.ஏ., “இன்று நான் செல்லும் இடமெல்லாம் காணும் மக்களின் இந்த எழுச்சியும், உற்சாக வரவேற்பும் எனக்குப் புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. இது வெறும் தேர்தல் பிரச்சாரம் அல்ல; மக்களின் நம்பிக்கைப் பயணம். பல்லடம் தொகுதியின் ஒவ்வொரு வீதிக்கும், கடைக்கோடி குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள் தடையின்றிச் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஒரே இலக்கு,” என்று முழங்கினார்.
மங்கலம் மற்றும் இடுவாய் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளைத் தனித்தனியாகக் கேட்டறிந்த அவர், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
“கடந்த காலங்களில் நாம் செய்த சாதனைகளே நமக்கான அத்தாட்சி. மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் எனத் தமிழகம் இன்று முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அதேபோல, பல்லடம் தொகுதியில் நிலுவையில் உள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சாலை வசதிகள் வரும் காலத்தில் முழுமையாகச் சீரமைக்கப்படும். இதே வேகத்தோடு நாம் களமாடுவோம், பல்லடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, முதலமைச்சரின் கைகளில் சமர்ப்பிப்போம்,” என்று ஆவேசமாக உரையாற்றினார்.
செல்வராஜின் இந்தப் புயல் வேகப் பிரச்சாரம், எதிர்க்கட்சியினரைச் சற்றே யோசிக்க வைத்துள்ளது. “மக்களின் நாடித் துடிப்பை அறிந்து செயல்படுகிறோம், வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையில் திமுகவினர் பல்லடம் கோட்டையைத் தட்டித் தூக்கத் தயாராகி வருகின்றனர். பல்லடம் தேர்தல் களம் இப்போது முழுவதுமாகச் சூடு பிடித்துள்ளதால், வரும் நாட்களில் அரசியல் களம் இன்னும் விறுவிறுப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





