ஆட்சி அதிகாரத்தில் பங்கு – மாணிக்கம் தாகூரின் கருத்து
சமீப காலமாக திமுகவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவரும் சிலரின் கருத்துகள், அரசியல் வட்டாரத்திலும், கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. திமுகவுடனான கூட்டணி தொடரும் என காங்கிரஸிலிருந்து ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினரின் கருத்துகள், திமுகவை சீண்டி பார்க்கும் விதமாகவே அமைவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி, அண்மையில் தவெக தலைவர் விஜயை சந்தித்தாக கூறப்பட்ட நிலையில், தமிழ்நாடு கடன் அளவு தொடர்பான அவரின் விமர்சனம், தமிழக அரசியலில் விவாதப்பொருளானது. அவர் மீது நடவடிக்கை வேண்டும் என திமுக கூட்டணிகள் எதிர்வினையாற்ற, உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என பொங்கி எழுந்தார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
அதேபோல், உட்கட்சி விவகாரங்களில் தோழமைக் கட்சிகள் தலையிடத் தேவையில்லை என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் வலியுறுத்தியிருந்தார். திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயண நிகழ்ச்சியிலும், காங்கிரஸ் பங்கேற்காமல் இருந்தது கவனம் பெற்றது.
இப்படியான சூழலில்தான், ஆட்சி அதிகாரம் குறித்து பேசியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர். கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது, அதிகாரத்தில் பங்கு தேவை என்று அவர் கூறியிருக்கும் நிலையில், கூட்டணியில் இருந்து எதிர்வினை கிளம்பியுள்ளது.
மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு, தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினையாற்றி இருக்கும் திமுக எம்.பி. அப்துல்லா, ஆர் எஸ் எஸ் குரலை மாணிக்கம் தாகூர் எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மாணிக்கம் தாகூர், மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என பேசியுள்ளார்.
காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து, தான் பேசுவேன் என்றும், ஆட்சியில் ஒரு அங்கமாக தாங்கள் இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இதற்கு முன்பு பேசியதையும் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





