சென்னை வரும் பிரதமர் மோடி..பாஜக நிர்வாகிகள் உடன் முக்கிய ஆலோசனை..!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.
அதற்காக வெள்ளிக்கிழமை மாலை தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அஜந்தா சிக்னல் சந்திப்பு, அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
அதன் பின், சென்னை திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார். அப்போது, தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில் அது தொடர்பான ஆலோசனையை அவர் மேற்கொள்ள உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து, கேரளாவுக்கு சனிக்கிழமை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.





