கங்கையை போல் வைகையை தூய்மைப்படுத்துவோம்! தேனி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க விரும்புகிறேன் என்று, தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
தேனி மாவட்டம் கரிசல் விளக்கு பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., – அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் கூறி, தனது உரையை அவர் தொடங்கினார்.
பிரதமர் மோடி பேசியதாவது: சுந்தரமகாலிங்கம் ஆசியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மண், துணிச்சலுக்கு பேர் போனது. ஏழைகளுக்கு நலத்திட்டங்களை செய்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2014ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சிக்காக உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன். இந்தியா தற்போது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை திமுக, காங்கிரஸ் ஏற்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

ராகுல் பிரதமர் என்று ஸ்டாலின் அறிவித்ததை அவர்கள் அணியில் ஒருவரும் ஏற்கவில்லை. இலங்கை தமிழர்களின் வளத்திற்காகவும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். தேச பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கிடையாது. கடந்த 60 ஆண்டுகளாக ஏதும் செய்யாதவர்கள் இப்போது செய்து தருகிறோம் என்கிறார்கள்.
மதுரை எய்ம்ஸ் மூலம் தென் மாவட்ட மக்கள் பயனடைவார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க நான் நினைக்கிறேன். விவசாயிகளுக்காக ஏதும் செய்யாதவர்கள் இந்த பகுதி விவசாயிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள் என்று மோடி பேசினார்.





