--- --:--:-- --

ஸ்டாலினை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ் பேட்டி..!

8

திமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சட்டமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து அவையைப் புறக்கணித்த போதிலும், ஓ. பன்னீர்செல்வம் இன்று முழுமையாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

 

அவை நடவடிக்கைகள் முடிந்த பிறகு ஸ்டாலின் தனது அறைக்குச் செல்லும் வழியில், ஓபிஎஸ் முன்கூட்டியே அங்கு காத்திருந்து அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். வெறும் நலம் விசாரிப்போடு இந்தச் சந்திப்பு முடிந்துவிடவில்லை. ஸ்டாலின் அழைப்பின் பேரில், அவரது அறைக்குள் சென்ற ஓ. பன்னீர்செல்வம், சுமார் 10 நிமிடங்கள் அவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடினார்.

 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி தரப்பால் கதவுகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த ரகசியப் பேச்சுவார்த்தை பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. ஓபிஎஸ்ஸின் மிக நெருங்கிய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இந்நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ். “ஐந்தாண்டு கால திமுக ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.

 

மேலும் திமுகவில் இணைகிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பொறுமையாக இருங்கள்” என்று சூசகமாக பதில் அளித்தார். ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு என்பது இது முதல் முறையல்ல. கடந்த 2025 ஜூலை மாதம், அடையாறு தியோசோபிகல் சொசைட்டி பூங்காவில் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஓபிஎஸ் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இந்தச் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் தரப்பில் “மரியாதை நிமித்தமானது” என்று சொல்லப்பட்டாலும், ஓரிரு நாட்களில் அவர் ஒரு ‘மெகா’ முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Right Menu Icon