நா.த.க வேட்பாளர் சத்யா மீது கல்வீச்சு தாக்குதல்..!
சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில், ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா வாகன அணிவகுப்பின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா, தனது ஆதரவாளர்களுடன் சுனாமி குடியிருப்புப் பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார். இந்த எதிர்பாராத தாக்குதலில் வேட்பாளர் சத்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் திடீர் பதற்றமான சூழல் நிலவியது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எண்ணூர் காவல் நிலைய ரோந்துப் படையினர், உடனடியாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சிறுவன் ஒருவனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையின் போது வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





