ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்
தமிழக அரசின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம், விருதுநகர் உள்பட 11 மாவட்டங்களில் ரூ.3,575 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இக்கல்லூரிகளில் உடனடியாக வகுப்புகளை தொடங்க முதல் கட்டமாக மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுமான பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இதன்படி, ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரகம் அருகே 22.6 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதில் மருத்துவக்கல்லூரி கட்டடம் ரூ.125.01 கோடி, மருத்துவமனை கட்டடம் ரூ.150.01 கோடி, குடியிருப்பு கட்டடம் ரூ.69.98 கோடி என ரூ.345 கோடியில் கட்டப்படுகின்றன.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.5.87 கோடி மதிப்பில் ம நிறைவடைந்த 5 திட்டங்கள், ரூ.18.31 கோடி மதிப்பில் 9 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். தமிழக சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்துரை பேசினார்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது ராமநாதபுரம் மாவட்டம் அழகிய கடற்கரைகள் கொண்ட மாவட்டமாகும் . இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டு மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது . ராமேஸ்வரம் என்று சொன்னாலே , இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல , உலக நாட்டில் உள்ள அத்தனை பேரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு பகுதி , இந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் . ராமபிரானே வழிபட்ட ராமநாத சுவாமி திருக்கோயிலும் , ராமாயண இதிகாசத்தில் ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்ல அமைத்த சேது பாலமும் , நமது ஏவுகணை நாயகன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த இடம் ராமேஸ்வரம் ஆகும் .
சேது பாலத்தை சுற்றியிருக்கும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த மன்னர்கள் சேது மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் . சேது மன்னர்கள் ஆண்ட பகுதி சேது நாடு என்றும் , ராம நாடு என்றும் அழைக்கப்பட்டு , பிற்காலத்தில் ராமநாதபுரம் சீமை என்றும் , ராமநாதபுரம் என்றும் அழைக்கப்பட்டது . சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையில் பாண்டிய மன்னர்களும் , சேதுபதி மன்னர்களும் சிறந்து விளங்கினர் இம்மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கண்மாய்கள் , குளங்கள் , குட்டைகள் , குட்டங்கள் , ஊரணிகள் , ஏந்தல்கள் போன்ற நீர் சேகரிப்பு அமைப்பினை அனைத்து ஊர்களிலும் ஏற்படுத்தி , வைகை நதியிலிருந்து பெறப்பட்ட நீரினையும் , மழை நீரையும் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர் .
இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களும் , கிறிஸ்துவர்களும் , இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து சமய நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்ற மாவட்டம் இந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆகும் . இந்த மாவட்டம் தேவர் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த மண் ஆகும் . அதேபோல் , மறைந்த இம்மானுவேல் சேகரன் பிறந்த மண் .

ஆகவே , இந்த அற்புதமான மாவட்ட மண்ணிலே புதிய மருத்துவக் கல்லூரி இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கின்றது . இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு . அந்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் , முதல் அடிக்கல் நாட்டு விழா காண்கின்ற மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் . இது ஒரு ராசியான இடம் , ஒரு புண்ணிய பூமி . இந்த புண்ணிய பூமியிலே இந்த மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா காண்பது இறைவன் கொடுத்த வரமாக நாங்கள் கருதுகிறோம் .
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டிற்கு செல்ல நிதி உதவி அளித்து உதவியவர் , ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர சேதுபதி சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய எழுச்சி மிஉக்க உரையாற்றிய பின் , இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ராமேஸ்வரம் வழியாக நாடு திரும்பும்போது , அவரது பாதங்கள் முதலில் தன் தலையில் பட வேண்டும் என்று முழங்காலிட்டு மிக்க மரியாதையுடன் , அவரை வரவேற்றார் சேதுபதி மன்னர் .
இவ்வாறு அவர் முழங்காலிட்டு சுவாமி விவேகானந்தரை வரவேற்ற இடம் தான் இன்றும் பாம்பன் அருகே குந்துக்கல் என்று அழைக்கப்படுகிறது மேலும் விவேகானந்தருக்கு அதே இடத்தில் ஒரு முழு உருவச் சிலையுடன் கூடிய தியான மண்டமும் , நூலகமும் அமைை்கப்பட்டது தற்போது ஒரு சுற்றுலாத் தலமாக இன்றைக்கு காட்சி அளிக்கின்றது . இம்மாவட்டத்தில் , அதிக அளவிலான மீனவர்களும் , மீன்பிடி தொழிலாளர்களும் , மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு , மீன்பிடி உபதொழில்களும் செய்து வருகின்றனர் .
இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கச்சத் தீவினை மீட்க உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது . அம்மா வழியில் செயல்படுகின்ற எங்களுடைய அரசு , அம்மா மறைவிற்குப் பிறகு , அம்மா வழியிலே எங்களுடைய அரசும் அந்த சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது . நீண்ட காலமாக , ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைமையிடம் மதுரையில் செயல்பட்டு வந்தது .
1985ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் , ராமநாதபுரம் மாவட்டத்தை நிர்வாக நலனுக்காக மூன்றாகப் பிரித்தபோது , ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைமையிடத்தை ராமநாதபுரம் நகருக்கே மாற்றி உத்தரவிட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன் . இந்த மாவட்டத்தை உருவாக்கிய பெருமை எம் . ஜி . ஆர் அவர்களைச் சேரும் . சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்ட போது , அம்மா அவர்கள் , இம்மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் என்ற ஊரில் தனது தாயார் திருமதி சந்தியா அவர்களின் நினைவாக ஒரு சத்துணவுக் கூடத்தை கட்டிக் கொடுத்தார் .
இவ்விரு பெருந்தலைவர்களும் இம்மாவட்டத்தை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பது இதன் மூலம் விளங்கும் . இவ்விரு பெருந்தலைவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசால் , இந்த மாவட்ட மக்களின் நெடுநாளைய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் , இன்று புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டு விழா கண்டுள்ளது என்பதை பெருமையுடன் , மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் கொள்கையாகும் .
இதன்படி , சிவகங்கை , திருவண்ணாமலை , சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் , கோயம்புத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை , புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் , 700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன் துவக்கப்பட்டுள்ளன ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன .
இவ்வாறு கடந்த 8 ஆண்டுகளில் 1 , 350 கூடுதல் மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு , மருத்துவம் படிக்க விரும்பும் நம் மாணவர்களின் கனவினை நனவாக்க மாண்புமிகு அம்மாவினுடைய அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அரசு எங்களுடைய அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் .
அதிக அளவில் கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி , மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என மாண்புமிகு அம்மாவின் அரசு முடிவெடுத்தது . ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து , அவசர மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைகளுக்காக , சுமார் 100 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் , இம்மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதை நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும் போதும் , கோரிக்கை மனுக்கள் அளித்த போதும் , தனியே கடிதங்கள் வாயிலாகவும் எடுத்துக் கூறி வந்தேன் .

அதன் பயனாகத்தான் , இன்று , இங்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாகி , இதற்கு , நான் அடிக்கல் நாட்ட வந்துள்ளேன் என்பது , எனக்கு உள்ளபடியே பெருமகிழ்ச்சியாகவும் , தனிப்பட்ட வெற்றியாகவும் நான் கருதுகிறேன் . • இத்தருணத்தில் , மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும் , மாண்புமிகு மத்திய சுகாதாரத் துறை ஹர்ஷவர்தன் அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் எங்கள் அரசு ,தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திய காரணத்தினால்தான் , குறுகிய காலத்தில் , 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு , மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு பெற்றுள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன் .
300 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளை இணைத்து , புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது . இதற்காக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பட்டப் படிப்பு இடங்களுக்கான செலவு 325 கோடி ரூபாயாகும் . இதற்கு மாநில அரசாலும் , மத்திய அரசாலும் நிதி உதவி செய்யப்பட்டு , இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றோம் .
தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மாணாக்கர்களிடையே அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டும் , மருத்துவர்களின் தேவையை கருத்தில் கொண்டும் மாண்புமிகு அம்மாவின் அரசு கூடுதல் நிதி அளித்து , மருத்துவ படிப்பு இடங்களை கல்லூரிக்கு தலா 150 என உயர்த்தி ஆணையிட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
• இத்திட்டத்தின் முதல் கட்டமாக – ராமநாதபுரம் , விருதுநகர் , திண்டுக்கல் , நாமக்கல் , நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி துவங்க தலா 20 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு , மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி , மாண்புமிகு அம்மாவின் அரசு அனுமதி பெற்றது . இந்த 6 இடங்களில் 2021 – 2022ஆம் கல்வி ஆண்டு முதல் , தலா 150 மாணவர் சேர்க்கையுடன் , புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கும் , இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள , முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலரை நியமனம் செய்தும் , கட்டடப் பணிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் , அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன .
இரண்டாவது கட்டமாக , கிருஷ்ணகிரி , திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு , கட்டடப் பணிகளுக்காக தேவையான நிதியும் ஒதுக்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன . சமீபத்தில் , அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில் , புதியதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க , மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது .
இவ்வாறு 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை சுமார் 4 , 500 முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசிடம் மாண்புமிகு அம்மாவின் அரசு அனுமதி பெற்று சாதனை படைத்த அரசாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் . இதற்காக 2020 – 2021 – ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் 1 , 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இதனால் , தற்போது தமிழ்நாட்டில் உள்ள 3 , 250 மருத்துவ பட்டப் படிப்பு இடங்களுடன் , 2021 – 22ஆம் கல்வி ஆண்டு முதல் 1 , 650 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
“ பிணியின்மை , செல்வம் விளைவின்பம் ஏமம் அணி என்ப நாட்டிற்கு இவ்வைந்து ” என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் . அதாவது நோயற்ற வாழ்வு , செல்வச் செழிப்பு , நல்ல பயிர் விளைச்சல் , இன்பம் நிறைந்த வாழ்வு , பாதுகாப்பு என்ற ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று கூறினார் திருவள்ளுவர் . அவர் கூறியது போல் இந்த ஐந்தையும் பெற்று இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்வது நமது தமிழ்நாடாகும் என்பதைப் பெருமையுடன் தெரிவிக்க விரும்புகிறேன் .
“ தகுதி வாய்ந்த மருத்துவர்கள் , செவிலியர்கள் , தொழில் நுட்ப பணியாளர்கள் , நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழல் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ” – என்றார் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் . ” தமிழ்நாட்டு மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் ” என்ற மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களின் எண்ணத்தை ஈடேற்றவும் , மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் குறிக்கோளை அடையவும் , மாண்புமிகு அம்மாவினுடைய அரசு , மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன் .
– டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் – முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் அம்மா ஆரோக்கியத் திட்டம் – அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்காக அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் நடமாடும் மருத்துவமனைத் திட்டம் தொற்றாநோய் தடுப்பு , கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம் | தாய்ப்பால் வங்கித் திட்டம் – உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் திட்டம் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை விபத்து சேவை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவுதல் 10 | – 108 அவசர கால ஊர்தி சேவை மற்றும் – 104 தகவல் , ஆலோசனை மற்றும் புகார் உதவி மையம் – 102 தாய் , சேய் நல ஆம்புலன்ஸ் ஊர்தி சேவை போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்துகின்ற மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது . இவற்றுக்காக , 2020 – 2021 – ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவிக்கின்றேன் .

ஆகவே , இன்றைக்கு தமிழ்நாட்டிலிருக்கின்ற ஏழை , எளிய மக்களுக்கு உரிய முறையிலே சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக இவ்வளவு தொகையை மாண்புமிகு அம்மாவினுடைய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் . மேலும் , . ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் , மொத்தம் ஆயிரத்து 634 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர சுகாதாரத் திட்டத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது .
இதன் மூலம் நகர்ப் புரங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் , 10 மாவட்ட மற்றும் மாவட்ட துணை மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் . தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறையின் மூலமாக , தமிழ்நாடு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும் , குறிப்பாக தொற்றா நோய்களின் நோய்த் தடுப்பு மேலாண்மையை வலுப்படுத்தவும் , – | ஏற்றத்தாழ்வின்றி சமமான தாய் – சேய் சுகாதார சேவைகளை வழங்கவும் , 2 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு இன்றைக்கு செயல்படுத்தியுள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன் .
இதுபோன்று எண்ணற்ற சாதனைகளை சுகாதாரத் துறையில் மாண்புமிகு அம்மாவின் அரசு நிகழ்த்தி வருகிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவிக்க விரும்புகின்றேன் . மாண்புமிகு புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்ற போது இந்த மாவட்டத்தில் 24 புதிய அறிவிப்புகளை நான் வெளியிட்டேன் . அவற்றில் , அதில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் .
ராமநாதபுரம் நகராட்சியை , சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது , – ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம் . ஆர் . ஐ . ஸ்கேன் , சி . டி . ஸ்கேன் , டயாலிசிஸ் கருவிகள் , எக்கோ கார்டியோகிராம் ஆகிய கருவிகள் நிறுவப்பட்டுள்ளது , – மூப்பியல் பிரிவு , விபத்து சிகிச்சை பிரிவு அமைக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது , – பரமக்குடி அரசு மருத்துவமனையில் சி . டி . ஸ்கேன் , டயலாசிஸ் கருவிகள் வழங்கி , அறுவை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது , போன்ற 10 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன , எஞ்சிய 14 அறிவிப்புகள் பல்வேறு நிலையில் உள்ளன .
இது தவிர , ராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன் . நீர் நிலைகளில் மழை நீர் சேகரிப்பினை அதிகரிக்க குடிமராமத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு மக்களுக்காக அர்ப்பணித்தது . நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது . ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் , இந்த வறட்சியான மாவட்டத்திலே நீருக்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலே , குடிமராமத்துத் திட்டத்தை அறிமுகம் செய்து இந்த மாவட்டத்திலே இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்து , அமல்படுத்தி இருக்கின்றோம் . இத்திட்டத்தின் கீழ் , 29 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 68 ஏரிப் பணிகள் நிறைவேற்றப்பட்டும் , 37 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 69 ஏரிப் பணிகள் நடைபெற்று வருகின்றன .
ஆகவே , பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக இந்த குடிமராமத்துத் திட்டத்தைக் கொண்டுவந்து , இந்த ராமநாதபுரம் மாவட்டத்திலே ஏரிகள் , குளங்கள் , குட்டைகள் , ஊரணிகளெல்லாம் இன்றைக்கு தூர்வாரப்படுகின்ற காட்சிகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் . அதேபோல , கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டுமென்பதற்காக விலையில்லா கறவை பசுக்களும் , விலையில்லா வெள்ளாடுகளும் வழங்கப்படுகின்றன .
அதேபோல நம்முடைய மாணாக்கர்கள் சிறந்த கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொலைநோக்கு பார்வையோடு , விலையில்லா மடிக்கணினி வழங்குகின்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்கள் . மடிக்கணினி மூலமாக உலகத்தில் இருக்கின்ற செய்திகளை நம் வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும் . ஆகவே , அறிவுபூர்வமான கல்வி நம்முடைய மாணாக்கர்களுக்கு கிடைக்கச் செய்த பெருமை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை சாரும் . இந்தியாவிலேயே , விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது .
ஆனால் தமிழ்நாட்டிலே , புரட்சித்தலைவி அம்மா அவர்கள் , உலகத் தரத்திற்கேற்ற கல்வி , இன்றைக்கு ஏழை , பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் , பணக்காரருக்கு என்ன கல்வி கிடைக்கின்றதோ , அதே கல்வி ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவனுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக விலையில்லா மடிக்கணினி வழங்கி , இன்றைக்கு உயர்தர கல்வி கொடுத்த ஒரே அரசு , அம்மாவின் அரசு , ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதைப் பெருமையுடன் தெரிவிக்க விரும்புகின்றேன் . இதில் மட்டும் , இந்த மாவட்ட மாணவ , மாணவியருக்கு இந்த ஆண்டு 36 கோடியே 79 லட்சம் ரூபாயில் 29 ஆயிரத்து 897 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன் .
அதேபோல இன்றைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக , நீங்கள் தனியார் மருத்துவ மனைக்குப் போனால் 2 லட்சம் ரூபாய் வரை தான் மருத்துவ சிகிச்சை பெற முடியும் . அதை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு , தனியார் மருத்துவமனையில் நீங்கள் சிகிச்சை பெறுவதற்கனெ அதை 5 லட்சமாக உயர்த்தியிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன் . பசுமை வீடுகள் கட்டுகின்ற திட்டம் , இப்படி பல திட்டங்களை அம்மாவினுடைய அரசால் வழங்கப்படுகின்றது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன் .
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் என்ற ஒரு திட்டத்தை நான் அறிவித்தேன் . அந்தத் திட்டத்தின் மூலமாக , இந்த மாவட்டத்தில் 9 , 302 மனுக்கள் கொடுத்தீர்கள் . தங்களது பிரச்சினைகள் தீர்க்க அலுவலத்திற்குச் சென்று மனுக்களை அதிகாரிகளிடத்திலே கொடுக்கின்ற நிலை இருந்தது . அதற்குப் பதிலாக , அதிகாரிகளே உங்களுடைய பிரச்சினைகள் என்ன என்பதைக் கண்டறிந்து , நீங்கள் கொடுக்கின்ற மனுக்களை , நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே வாங்கி , அதற்குப் பரிகாரம் கண்ட அரசு எங்களுடைய அரசு . இத்திட்டத்தின் மூலம் 9 , 302 மனுக்கள் பெறப்பட்டு , அதில் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மூன்றே மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 , 101 நபர்களுக்கு முதியோர் ஓய்வுதியம் வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு .

அதுபோல் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன . அந்த மனுக்கள் எல்லாம் கவனத்திலே எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களால் , உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் . – இந்த மாவட்டம் அதிகமாக மிளகாய் விளையக்கூடிய மாநிலம் . ஆகவே , இந்த மாவட்டத்தில் பரமக்குடி மற்றும் முதுகளத்தூரில் சிப்பம் கட்டி , ஏலம் விடும் வசதியுடன் கூடிய முதன்மை மிளகாய் பதப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு , தற்போது பயன்பாட்டில் உள்ளது . மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் 128 . 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் .
டி . மாரியூர் , பாம்பன் , வேதாளை , முகுந்தராய சத்திரம் , தனுஷ்கோடி தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் 44 . 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு , மீனவர்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு அம்மாவின் அரசால் வழங்கப்பட்டுள்ள செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன் . – கமுதியில் 518 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு , மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது . ராமேஸ்வரம் , மண்டபம் , தங்கச்சி மடம் , உட்பட பல்வேறு இடங்களில் பல்நோக்கு பேரிடர் கால மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
முதுகுளத்தூரில் ஒரு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7 . 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது . சென்ற ஆண்டு சட்டமன்றத்தில் நான் அறிவித்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ . பி . ஜெ . அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்தேன் . அந்தக் கல்லூரி இன்றைக்கு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன் . – ஸ்ரீவில்லிபுத்தூர் – பார்த்திபனூர் சாலை – பிடாரிச்சேரி உட்பட மூன்று இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன . – சுமார் 10 கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு , இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
இத்திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன் . இந்த நிகழ்ச்சியின் வாயிலாக , * இன்று வருவாய் துறையின் சார்பில் 2 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உட்பட மொத்தம் 5 . 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கட்டடங்களை நான் திறந்து வைத்துள்ளேன் .
* புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது தவிர , திருவாடானை மற்றும் ராஜசிங்கமங்கலம் ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ள புதிய கால்நடை மருந்தகக் கட்டடங்கள் உட்பட 18 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 பணிகளுக்கு நான் இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன் . * அதே போல , 21 , 105 பயனாளிகளுக்கு சுமார் 105 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம் தமிழ்நாடு . மதச் சார்பின்மையை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது நமது மாநிலம் . இங்கு வாழும் அனைத்து சமயத்தினரும் சகோதரர்களாக பழகி வருகிறார்கள் .
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . , மற்றும் , மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் , மாண்புமிகு அம்மாவின் அரசும் , அனைத்து சமயத்தினரையும் பாதுகாக்கும் ஒரு மத நல்லிணக்க அரசாகவும் , சிறுபான்மையின மக்களுக்கு அரணாகவும் செயல்படுகின்ற அரசு அம்மாவினுடைய அரசு . இனியும் , சிறுபான்மையின மக்களை தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் . இதையே நான் சட்டமன்றத்திலும் தெரிவித்துள்ளேன் . ஆனால் சமீப காலங்களில் இதனை கண்டு பொறுக்காதவர்கள் , அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் , சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் ஐயப்படவோ , அச்சப்படவோ தேவையில்லை என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் . “
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு ” என்றார் மகாகவி பாரதியார் . சில கட்சியினரின் பொய் பிரச்சாரத்திற்கு செவி சாய்க்காமல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் . இதனை கூறும்போது , எனக்கு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது . ஒரு காட்டிற்கு அருகில் இருந்த ஊரில் , இரண்டு ஆடுகள் தோழமையுடன் அமைதியாக வாழ்ந்து வந்தன . இந்த ஆடுகளின் ரத்தத்தை ருசிக்க விரும்பிய ஒரு நரி , சில நாட்கள் அந்த ஆடுகளை நோட்டமிட்டு வந்தது . அந்த ஆடுகள் எப்போது பிரிந்து தனியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நரி , ஒரு நாள் தனியாக இருந்த அதில் ஒரு ஆட்டிடம் சென்று ,
“ நீயும் , உன் நண்பனும் உணவு உண்ண நீ ஒருவனே கஷ்டப்படுகிறாய் ; மற்றொரு ஆடு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது . உனக்கு கஷ்டமாக இல்லையா ? ” என்று கேட்டு , அந்த ஆட்டின் மனதில் விஷமத்தை உண்டாக்கியது . இதே போன்று மற்றொரு ஆட்டிடமும் சென்று இதே எண்ணத்தைக் கூறியது . ஒரு கட்டத்தில் அந்த ஆடுகளின் மனதில் தான் தான் கஷ்டப்படுகிறோம் என்ற எண்ணம் தோன்றவே , இரண்டு ஆடுகளும் ஒரு நாள் சண்டையிட்டுக் கொண்டன .
பின்னர் அவை மிகவும் சோர்வடைந்து ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டன . இதை கவனிக்காமல் , இரண்டு ஆடுகளும் அங்கிருந்து சென்று விட்டன என்று எண்ணிய அந்த நரி , அங்கு சிந்தி இருந்த ரத்தத்தை ருசித்துக் கொண்டிருந்தது . இதை இரண்டு ஆடுகளும் பார்த்து விட்டன . பின்னர் அவ்விரண்டு ஆடுகளும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டபோது தான் , நரியின் விஷமப் பிரச்சாரம் , அந்த ஆடுகளுக்குத் தெரிய வந்தது . இதனால் விழித்துக் கொண்ட அந்த ஆடுகள் ஒரு திட்டத்துடன் மீண்டும் சண்டையிடுவது போல் அங்கு வந்து மோதிக் கொள்ள தயார் ஆயின .
அந்த நேரத்தில் ஏதோ சமாதானம் செய்ய வந்தது போல் அங்கு வந்த நரியை , இரண்டு ஆடுகளும் சேர்ந்து முட்டித் தள்ளி விரட்டியடித்து அந்த நரிக்கு பாடம் புகட்டின . அதே போல் மக்களிடையே பிளவு ஏற்படுத்திட யார் முயன்றாலும் , மாண்புமிகு அம்மாவின் அரசின் முயற்சிகளாலும் , உங்களது ஒத்துழைப்பினாலும் , அது முறியடிக்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் .
அமைதி , வளம் , வளர்ச்சி என்ற மாண்புமிகு அம்மாவின் தாரக மந்திரத்தைப் பின்பற்றி , தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் . காவேரி ஆற்றின் உபரி நீரை மாயனூர் கதவணையிலிருந்து திருப்பப்பட்டு , கரூர் , திருச்சி , சிவகங்கை , விருதுநகர் வரை – புதிய கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்பட்டு , வைகை ஆறு மற்றும் குண்டாற்றில் இணைக்கப்பட்டு , இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன் .
* இந்தத் திட்டம் நிறைவேறுகின்றபொழுது , இம்மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியை நிலையாகப் பெறும் . மேலும் இராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் 675 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் திறனுடைய கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்தார்கள் . இத்திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் , திருவாடனை , முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 543 குடியிருப்புகள் பயன்பெறும் . * இத்திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 . 14 லட்சம் மக்கள் பயனடைவர் . அரசின் நிர்வாக ஒப்புதல் 28 . 7 . 2015 – ல் வழங்கப்பட்டது . கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டப் பணிகள் துவங்கப்படும் என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன் .
அதேபோல , இராமேஸ்வரம் என்று சொன்னாலே , தமிழ்நாடு மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி கொண்டு இருக்கின்ற பகுதியாகும் . இராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளுக்காக 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே யாத்ரி நிவாஸ் அம்மாவுடைய அரசால் அமைக்கப்பட்டு வருகிறது . சுமார் 250 படுக்கை வசதிகள் கொண்ட இந்த யாத்ரி நிவாஸ் கட்டடப் பணி தற்போது 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது . இன்னும் 10 சதவிகித பணி தான் எஞ்சியிருக்கிறது . அதுவும் கட்டிமுடிக்கப்பட்டு , விரைவில் திறந்து வைக்கப்படும் . இதனால் இங்கே வருகின்ற சுற்றுலா பயணிகள் தங்கி பயனடையலாம் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன் .
உலக அளவிலும் , இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு வருடத்திற்கு 1 கோடி பேர் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள் . இங்கே இருக்கின்ற 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுகின்ற போது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி , அவர்கள் மனதிலே இருக்கின்ற துன்பங்கள் , வேதனைகள் , துயரங்கள் போகும் என்று எண்ணுகின்றனர் . புண்ணிய தீர்த்தங்களில் நீராடுகின்ற போது அவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் .
அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலத்திற்கு வந்து நீராடுகின்ற பெருமை பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது . அப்படிப்பட்ட புண்ணிய பூமியாக விளங்குகின்ற இராமேஸ்வரம் அமைந்திருக்கின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் முதல் முதலாக இந்த மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன் . இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுற்றுலா பயணிகள் சென்று வர அம்மாவின் அரசு மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று சாலை வசதியை அமைத்து கொடுத்திருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன் .
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு திட்டங்களை இப்பகுதிகளிலே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் , கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க , அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து இந்த அறிவிப்புகளை வெளியிடுகின்றேன் . புதிய அறிவிப்புகள் 1 . முதுகுளத்தூர் வட்டாரத்தில் , 2 ஊராட்சிகளில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட , குளிர் சாதன கிடங்குகள் , தலா 1 . 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துத் தரப்படும் . 2 . பரமக்குடியில் , 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , புதிய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுப் பேருந்து வழங்கப்படும் . 3 . அனைத்து வட்டாரங்களிலும் , தலா 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் உலர் களங்கள் அமைத்துத் தரப்படும் .

19 4 . கமுதி மற்றும் சாயல்குடியில் உள்ள பேரூராட்சி வார சந்தைகள் தலா 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் , அபிராமம் பேரூராட்சி வார சந்தை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அபிவிருத்தி செய்யப்படும் . 5 . திருப்புல்லானி ஒன்றியம் , செங்கல் நீரோடையில் ஒரு தொடக்கப் பள்ளி துவங்க வேண்டியதன் அவசியத்தைக் கருதி , ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று புதிதாக துவக்கப்படும் . 6 . திருவாடானை ஒன்றியம் பாண்டுகுடி , மண்டபம் ஒன்றியத்தில் தங்கச்சிமடம் மற்றும் இருமேனி , போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை , கமுதி ஒன்றியம் பேரையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் , மண்டபம் ஒன்றியம் புதுமடத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும் கட்டட வசதிகள் செய்து தரப்படும் . 7 . பரமக்குடி வட்டம் , சத்திரக்குடி மற்றும் மஞ்சூர் , கீழக்கரை வட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் , பரமக்குடி அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி , பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் மற்றும் பரமக்குடியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் , புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .
ஒரே ஆண்டில் , மிகப் பெரிய சாதனையை நம்முடைய அரசு செயல்படுத்தி இருக்கின்றது . மிகக் குறுகிய காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசிடமிருந்து பலமுறை வற்புறுத்தி நாம் அனுமதி பெற்றிருக்கின்றோம் . இந்த அனுமதி பெறுவதற்கு உறுதுணையாக விளங்கிய மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி . விஜயபாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த , உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் .
அதேபோல் , அவருக்கு துணையாக நின்ற , இத்துறையின் செயலாளர் அவர்களுக்கும் மற்றும் வருவாய்த் துறை , நகர் ஊரமைப்புத் துறை , பொதுப் பணித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் , எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன் . மற்றும் எனது உத்தரவின் பேரில் பணிகளை விரைந்து ஒருங்கிணைத்த எனது அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் , இந்த நிகழ்ச்சியை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
இந்த அற்புதமான நேரத்தில் , இந்த நிகழ்ச்சியின் வாயிலாக துவக்கப்படும் மருத்துவக் கல்லூரி மூலம் , இந்தப் பகுதியிலே இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க பெறும் . இன்றைக்கு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதால் , இங்கே ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனையும் வர இருக்கின்றது . ஆகவே , இந்த மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருக்கும் . கடந்த காலங்களில் , அரசு மருத்துவமனையிலே சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று சொன்னால் , கிராமத்தில் இருப்பவர்கள் தர்ம ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன் என்று சொல்வார்கள் .
அதைமாற்றி சிறந்த முறையிலே , சிறப்பான கட்டட வசதிகளுடன் , தனியார் மருத்துவமனையை விட கூடுதலான வசதிகளை கொண்ட மருத்துவமனையை உங்களுக்கு வழங்க இருக்கின்றோம் . மருத்துவக் கல்லூரியையும் வழங்க இருக்கின்றோம் . ஆகவே , இந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் , தரமான கட்டடமாக , புது பொலிவுடன் திகழும் . அந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கக் கூடியவர்களுக்கும் , அதேபோல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற செல்பவர்களும் , உள்ளே செல்கின்ற போதே நீங்கள் குணமாகக்கூடிய அளவிற்கு இந்த கட்டட வசதி அமைத்து தரப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.





