ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மட்டகளப்பிற்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு –தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு – வடகிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நாளை (10-01-2026) மதியம் அல்லது மாலை கரையை கடக்கக்கூடும். தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வரும் 11ம் தேதி ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.





