முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 82 லட்சம் ரூபாய் வரி நிலுவை புகாரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் 4 மாடிகள் கொண்ட இல்லத்தை ஜெயலலிதா தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் இறந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு முதல் அதற்கு சொத்து வரி கட்டவில்லை என மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இந்த கட்டடத்தை அலுவலகத்தில் இருந்து குடியிருப்பு வகைக்கு மாற்றக் கோரி, ஜெயலலிதாவின் உறவினரான தீபக் 2017-ல் மனு அளித்ததாகவும் தெரிகிறது. ஆனால், சொத்து வரி செலுத்தாத நிலையில், ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக ஹைதராபாத் மாநகராட்சியின் துணை ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ் தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்தை மூடி சீல் வைத்ததாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.





