கோவை அரசு மருத்துவமனையில் நவீன செயற்கை கால் தயாரிக்கும் மையம் தொடக்கம்..!
கோவை அரசு மருத்துவமனையில் நவீன செயற்கை கால் தயாரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு மாவட்ட பொது மக்கள் சென்னை சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூரை சேர்ந்த யசோதா கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் கால் பாதிக்கப்பட்ட நிலையில் சர்க்கரை நோய் காரணமாக கால்களை அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
செயற்கைக் கால் பொருத்துவதற்கு சிகிச்சைக்கு பணம் இல்லாததால் செய்வதறியாமல் இருந்தபோது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக இவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் வறுமை குடும்பத்தை சேர்ந்த யசோதா போன்றவர்கள் பலன் பெறுவது எளிதாகிறது.
விபத்து, நாள்பட்ட சர்க்கரை நோயால் ஆறாத புண், புகைப்பிடிப்பதால் கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு போன்ற காரணங்களால் கால்களை அகற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு செயற்கை உறுப்புகளை செலவில்லாமல் பொருத்த சென்னை செல்ல வேண்டிய நிலையை இந்த மையம் மாற்றியுள்ளது.
காலை அகற்றிய பின் ஏற்படும் புண் வீக்கம் ஆகியவை முழுமையாக குறைந்த பின்பு செயற்கை கால் பொருத்த முடியும். இதற்காக பிரத்யேகமாக 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன்பெறுவார்கள்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படும் சிகிச்சை வாயிலாகக் கிடைக்கும் சிறு தொகையை சேமித்து கிடைக்கப்பெற்ற தொகையின் மூலம் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.






