--- --:--:-- --

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 50 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என அதிர்ச்சி தகவல்!! மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்வு!!

f

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்ற பகீர் தகவலை சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை, கடந்த இரு வாரங்களாக மெதுவாக உயர்ந்து நேற்று முன்தினம் வரை 50 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டு 67 ஆக உயர்ந்தது.

 

இந்நிலையில் இன்று காலை மேலும் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 74 ஆக உயர்ந்த நிலையில்,  செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அதிலும், இந்த 50 பேருமே டெல்லியில் நடந்த இஸ்லாமிய அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில்,டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,131 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் 515 பேர் வரை கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்றும் அவர்களிடம் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் 22 பேர் எனவும், நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் 18 பேர் என்றும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது.

 

மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான இந்த 124 பேரில் 80 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்ற தகவலையும் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மீதமுள்ள 616 பேரை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன் வந்து தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தமிழகத்தில் ஒரே நாளில் கொரானோ தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கெரோனா பாதிப்பு எண்ணிக்கை 1397 ஆகவும், உயிரிழப்பு 35 ஆகவும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon