இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டைகளுக்கான அப்டேட் செயல்முறையை எளிமையாக்கி, வேகப்படுத்தியுள்ளது. நவ.2025 முதல், ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை முழுவதுமாக ஆன்லைனிலேயே மாற்றியமைக்க முடியும். இந்த டிஜிட்டல் முறை, இனி ஆதார் சேவா கேந்திரா மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் காகித ஆவணச் சமர்ப்பிப்பு முறையையும் முடிவுக்குக் கொண்டுவரும். இன்று (நவ.1) முதல் யு.ஐ.டி.ஏ.ஐ-யால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகள், சேவைகளை வேகமாகவும், எளிமையாகவும், பயனர் நட்புடன் மாற்றும் நோக்கத்துடன் உள்ளன.ஆதார் அட்டைதாரர்கள் இனி தங்கள் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் தொடர்பு எண்ணை முழுவதுமாக ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.
இந்த செயல்முறையில், இப்போது பான் அல்லது பாஸ்போர்ட் போன்ற இணைக்கப்பட்ட அரசுப் பதிவுகள் மூலம் தரவு சரிபார்க்கப்படும். இதனால் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை அல்லது மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும். இருப்பினும், கைரேகைகள், கருவிழி ஸ்கேன்கள் அல்லது புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு, சரிபார்ப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவா கேந்திரா மையத்திற்குச் செல்ல வேண்டியது கட்டாயம்.
யு.ஐ.டி.ஏ.ஐ, ஆதார் புதுப்பிப்புகளுக்குப் புதிய கட்டண அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியியல் விவரங்களான் (Demographic Details) பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் அப்டேட் (Biometric) கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 125 ஆகும்.
ஆன்லைன் மூலம் ஆவணங்களைப் புதுப்பிக்கும் சேவை ஜூன் 14, 2026 வரை இலவசமாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, இதேபோன்ற கட்டணங்கள் (ரூ. 75) ஆன்லைன் ஆவண அப்டேட்டுக்கு பொருந்தும். 5 முதல் 7 வயது வரம்பிலும், 15 முதல் 17 வயது வரம்பிலும் உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புதிய கட்டணங்கள் மற்றும் சலுகைகள் ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களைச் சரியான நேரத்தில் புதுப்பித்துக் கொள்ள உதவும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆதார் மற்றும் பான் அட்டைகளை இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் டிசம்பர் 31, 2025-க்குள் 2 ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி 1, 2026 முதல் அவர்களின் பான் கார்டு செயலிழக்கப்படும். புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களும் பதிவு செய்யும் போது ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஓடிபி, வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி ஆதார் உறுதிப்படுத்தல் போன்ற எளிமைப்படுத்தப்பட்ட e-KYC விருப்பங்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது விரைவான, காகிதமில்லாத மற்றும் வெளிப்படையான அடையாளச் சரிபார்ப்பு செயல்முறையை உறுதி செய்கிறது.
அதிகாரப்பூர்வ ஆதார் இணையதளத்திற்குச் செல்லவும்.உங்க ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓ.டி.பி. மூலம் உள்நுழையவும்.”Update Aadhaar” என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்க மாற்ற விரும்பும் விவரங்களைத் (பெயர்/முகவரி/DOB/மொபைல் எண்) தேர்ந்தெடுக்கவும்.
தேவைப்பட்டால், பொருத்தமான ஆவணங்களைப் பதிவேற்றவும். உங்க கோரிக்கையைச் சமர்ப்பித்து, அதன் முன்னேற்றத்தை ஆன்லைனில் கண்காணிக்கவும். சரிபார்க்கப்பட்டதும், புதுப்பிப்புகள் தானாகவே உங்க ஆதார் சுயவிவரத்தில் பிரதிபலிக்கும்.
ஆன்லைன் ஆதார் அப்டேட் ஜூன் 14, 2026 வரை கட்டணம் இல்லாமல் இருக்கும் என்று யு.ஐ.டி.ஏ.ஐ அறிவித்துள்ளது. அங்கீகாரம் செயல்பட, உங்களது மொபைல் எண் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.






