தவெக? திமுக? கூட்டணி குறித்து அதிரடியாக தெரிவித்த திருமாவளவன்!

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறது. குறிப்பாக தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை முன்வைத்ததில் இருந்து இந்தப் பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசிகவின் தலைவர் திருமாவளவன் பல்வேறு கட்டங்களில் விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தவெக தலைவரும் நடிகருமான விஜயோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர்.

 

அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.நடிகர் விஜய் அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், “ஆட்சியதிகாரத்தில் பங்கு” என்பது ‘விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசியுள்ளார்’ என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன.

 

அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.அதற்கு எதிர்வினையாக நம் தரப்பு கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டோம். அவரது உரையை நாம் கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால், “வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்கைள” எப்படி நாம் கடந்துபோவது? அவர்களுக்கு விடை சொல்லவேண்டும் என்பதைவிட, என் உயிரின் உயிராய் எனக்குள் இயங்கும் உங்களுக்கு நமது கட்சியின் நிலை குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டியது தவிர்க்க இயலாத தேவையாகிறது.

 

திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளன்று “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அவ்விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டுகின்றனர். நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கின்றனர்.

 

இந்தநூல் கடந்த ஏப்ரலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வெளியிடுவதாக தான் பதிப்பகத்தார் திட்டமிட்டனர். அப்போதே இந்த நூலின் வெளியீட்டு விழா குறித்தும் பேசினர். அதில் நானும் பங்கேற்க வேண்டுமென்றும் கோரினர். முறைப்படி இசைவுகோரி மடல் எழுதுவோம் என்றும் கூறினர்.

 

எனவே, அப்போதே நான் அதில் பங்கேற்க இசைவளித்துவிட்டேன். அந்நிகழ்வில் பங்கேறகுமாறு தமிழ்நாடு முதலமைச்சரும் நமது கூட்டணியின் தலைவருமான மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, இந்து ராம், ஆனந்த் டெல்டும்டே போன்றோரை அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது தெரிவித்தனர்.