லட்டு… துட்டு… வேட்டு! புனிதத் தன்மையை இழந்ததா திருப்பதி லட்டு…? என்னதான் நடக்கிறது ஏழுமலையான் கோயிலில்?

திருப்பதி லட்டுவில் மிருகக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள், அதில் இருந்து குட்கா பாக்கெட் இருக்கும் வீடியோவை பக்தர் ஒருவர் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார். பணம் என்ற வணிக நோக்கிற்காக திருப்பதி லட்டு அதன் புனிதத் தன்மையை இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே பெருமாளுக்கு அடுத்து எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அங்கு பிரசாதமாகத் தரப்படும் லட்டு. திருப்பதி சென்று வந்தவர்கள் விபூதி பிரசாதத்துடன் அவசியம் மற்றவர்களுடன் பகிர்ந்து தருவது திருப்பதி லட்டுவைத்தான். பிரசாதமாக தரப்படும் லட்டுவை கொஞ்சமாவது வாங்கி சாப்பிட்டால், திருப்பதிக்கே போய்வந்த திருப்தி கிடைக்கிறது.

 

ஆனால், புனிதம் மிக்க லட்டு குறித்த சர்ச்சைகள் ஏழுமலையான் பக்தர்களை கவலை அடையச் செய்துள்ளது.  திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 

அவரது இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்டு விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுக்க, இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை ஆந்திர மாநில அரசு அமைத்துள்ளது. தற்போது கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க தேவையான நெய்யை கர்நாடக அரசுக்கு சொந்தமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்து வருகிறது.

 

இதனிடையே, விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்த நிலையில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் இடங்கள், லட்டு விற்கும் பகுதி உள்ளிட்ட கோவிலின் சில பகுதிகளில் திங்களன்று சாந்தி ஹோமம் நடைபெற்றது.

 

ஒருவழியாக லட்டுவில் விலங்கு கொழுப்பு விவகாரம் சற்று அடங்கிய நிலையில், லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெலங்கானா பக்தர் வீடியோ வெளியிட்டதால் மீண்டும் அதிர்ச்சியும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

 

தெலங்கானா மாநிலம் கம்மம் கொல்லகுடேம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. இவர் கடந்த 19ஆம் தேதி தனது உறவினர்களுடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு லட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்றார். வீட்டிற்கு சென்றதும் உறவினர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக லட்டை எடுத்து உடைத்து உள்ளார்.

 

வழக்கமாக திருப்பதி லட்டுவை உடைத்தால், அதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் தான் வரும், ஆனால் பத்மாவதி உடைத்த லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்துள்ளது. அப்போது பிரசாதத்தில் புகையிலை குட்கா பாக்கெட் கவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

 

உடனடியாக பத்மா, லட்டுவில் குட்கா கவர் இருப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளதில் பதிவு செய்து வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

 

அந்த வீடியோவில் பத்மா” திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். புனிதமான ஏழுமலையான் கோயிலில் இவ்வாறு இருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்க திருப்பதி தேவஸ்தான குழுவினர், கொல்லகூடேம் கிராமத்திற்கு செல்ல உள்ளனர்.

 

காலங்காலமாக புனிதமான கருதப்பட்டு வருகிறது திருப்பதி கோயில் பிரசாதமான லட்டு. அதில் மிருகக் கொழுப்பு கலப்பு என்பதோ, குட்கா பாக்கெட் இருப்பதோ உண்மையில் மிகவும் வருத்தமான அதிர்ச்சியான ஒன்றுதான்.

 

அப்படியென்றால் திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் என்னதான் நடக்கிறது? உண்மையிலேயே திருப்பதி லட்டு சுகாதாரமான முறையில் தான் தயாரிக்கபடுகிறதா என்ற பல சந்தேகங்களுக்கு வழிவக்குக்கிறது. பிரசாதமாகக் கருதப்பட்ட லட்டுவுக்கு தேவை அதிகமாக உள்ளதால், அதன் தயாரிப்பு வணிக நோக்கில் மாறிவிட்டதா? துட்டு பார்க்கும் ஆசையில் திருப்பதி லட்டுவின் புனிதத்தன்மைக்கு வேட்டு வைத்துவிட்டனரா?

 

எல்லாம் அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம். ஆனால், பக்தர்களின் நம்பிக்கையை தகர்க்கும், கோயிலின் புனிதத்தை கெடுக்கும் யாரையும் பெருமாள் கவனிக்க வேண்டிய விதத்தில் நிச்சயம் கவனிப்பார் என்று நம்புவோமாக!