நீட் தேர்வில் இருந்து பிள்ளைகளை காக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்றும் , தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை நடிகர் விஜய் வரவேற்றது இருப்பதை தானும் வரவேற்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
ஊரும் உணவும் என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவு திருவிழாவை சென்னை செம்மொழி பூங்காவில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தற்போது தான் மற்ற மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு குரல்கள் வர தொடங்கியுள்ளது என்று தெரிவித்த அவர், நீட் தேர்வு குறித்து மற்றவர்களும் உணர்ந்து கொண்டிருக்க கூடிய இந்த வேலையில் தொடர்ந்து திமுக வலியுறுத்தும் என்றார்.இதே போல நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கும் நடிகர் விஜயின் கருத்தை நானும் வரவேற்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட்டிலிருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அத்தனை பேருக்கும் உள்ளது என கனிமொழி எம்.பி., கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு நாள் கூட அவர்களால் சபையை நீட்டித்து நடத்த முடியவில்லை என்றும் நிச்சயமாக அவர்களால் நடத்தி இருக்க முடியும் ஆனால் அரசாங்கம் முன் வரவில்லை என்று தெரிவித்தார். மணிப்பூர் குறித்தும் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை . பாராளுமன்ற மரபுகளின் படி பிரதமர் உரையின் மீது எதிர்கட்சித் தலைவர் குறுக்கிட எழுந்து நின்றால் நிச்சயம் அனுமதிக்கப்படுவார். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக அதற்கு அனுமதி இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யார் வேண்டுமானாலும் குறிக்கிடலாம் என்றார்.
ஆனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யாருக்கும் குறிக்கிடுவதற்கான உரிமை இல்லை அந்த நடுநிலைமைதான் தான் நாடாளுமன்றத்தில் உள்ளது என்று கனிமொழி கூறினார். முதன்முதலாக தூத்துக்குடியில் நெய்தல் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெற்றது. தற்போது இரணடாம் ஆண்டாக நடத்தப்படும் இந்த திருவிழாவில் 12 உணவங்க அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை, பர்மா போன்ற நாடுகளின் பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றுள்ளது.இந்த உணவு வகைகள் ஆரோக்கியமானது என்றும் வாங்கி உண்டவர்களும் தனித்தன்மையான சுவையுடன் இருப்பதாகவும் கூறினர்.சென்னை செம்மொழி பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனி,ஞாயிறு என மூன்று நாட்கள் இந்த உணவு திருவிழா நடைபெறவுள்ளது. இந்த உணவு விழாவின் தொடக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்பட புலம்பெயர்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.