ஓபிஎஸ்-க்கு இது சோதனைக்காலம். கட்சி, சின்னம் பறிகொடுத்தவருக்கு பாஜக கூட்டணியில் ஒரு சீட் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வேறு வழியில்லாமல் அதையும் ஏற்றுக் கொண்ட ஓபிஎஸ், ராமநாதபுரத்தில் சுயேச்சையாக களமிறங்கி இருக்கிறார்.
ஆனால், சுயேச்சையாக நின்ற ஓபிஎஸ்-க்கு போட்டியாக ஐந்து ஓபிஎஸ்களை களமிறக்கி அரசியல் எதிரிகள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு குடைச்சல் கொடுத்தனர். அதேபோல், சின்னம் வாங்குவதும் பெரும் போராட்டமாகிவிட்டது.
ஓபிஎஸ் தனக்கு வாளி வேண்டுமென்று கேட்டுப் பார்த்தார்; ஆனால் அவர் பெயரில் உள்ள ஓபிஎஸ்கள் தங்களுக்கும் வாளி வேண்டுமென்று மல்லுக்கட்டினர். இதையடுத்து குலுக்கல் முறையில் சின்னத்தை தேர்வு செய்ய, தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி குலுக்கலில் சின்னம் தேர்வு செய்தபோது, திருமங்கலத்தை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்திற்கு வாளி சின்னம் கிடைக்க, மாஜி முதல்வர் ஓபிஎஸ் கொஞ்சம் அப்செட் ஆனார். இரட்டை இலைச் சின்னம் தான் கை நழுவியது என்று பார்த்தால் வாளியும் கிடைக்காத நிலையில், பன்னீருக்கு திராட்சை, பலாப்பழம் மட்டுமே இருந்தது. இதில் குலுக்கலில் ஓபிஎஸ்-க்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது.
ஒருவழியாக பழம் நழுவி ஓபிஎஸ் கைக்கு கிடைக்க, கிடைத்ததை வெச்சு திருப்திபட்டுக் கொள்ளும் மனநிலைக்கு வந்தார் ஓபிஎஸ். அதே நேரம், அண்ணனுக்கு திராட்சை கிடைச்சிருந்தா நல்லா இருக்கும். பன்னீர்- திராட்சை பெயர் பொருத்தம் சூப்பரா இருந்திருக்கும் என்று அவரது ஆதரவாளர்களே அங்காலாய்த்தனர்.