நேற்று வரை பாஜகவில் இருந்த தடா பெரியசாமி, திடீரென அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். தனக்கு சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்று கோபத்தில் இருந்தவரை கொம்பு சீவி, தன் பக்கம் இழுத்திருக்கிறது அதிமுக.
மக்களவைத் தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் இருந்த அதிமுகவின் ஆசையில் மண் அள்ளிப் போட்டது பாஜக. பலம் வாய்ந்த பாமகவை கடைசி நேர காய் நகர்த்தல்கள் மூலம் பாஜக தன்பக்கம் இழுத்தது. இதையடுத்து, தேமுதிக-வை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு ஏற்பட்டது.
அப்போது முதலே பாஜக மீது செம காண்டில் இருந்து வரும் அதிமுக, உடனடியாக பாஜகவில் இருக்கும் அதிருப்தியாளர்களை தன் பக்கம் தூக்கிவிடுவது என்று கங்கணம் கட்டி, இப்போது தடா பெரியசாமியை தூண்டில் போட்டு இழுத்துள்ளது.
பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய சிடி நிர்மல்குமார் மூலம், மேலும் சில தாமரைக் கட்சியினரை இழுத்து தனது பதிலடித் தர இபிஎஸ் தயாராகிவிட்டாராம். வி.பி. துரைசாமி உள்ளிட்ட சிலர் அதிமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் குஷியாகச் சொல்கின்றனர்.