பக்கத்து வீட்டுக்காரரையே பகையாளியாக பார்க்கும் இந்த சமூகத்தில், குடியிருப்போர் அனைவரும் ஒன்றுகூடி பிறந்தநாள், திருமண நாள் என விசேசங்களை விமரிசையாகவும் ஒன்றுகூடி கொண்டாடி, விருந்து உண்டு மகிழ்கின்றனர். மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழும் திருப்பூர் தென்றல் நகர் மக்களின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு சிறுபூலுவபட்டி உட்பட்டது தென்றல் நகர். பெயருக்கேற்ப தென்றலாக, இனிமையான செயல்களை செய்து வருகின்றனர் இங்குள்ள குடியிருப்புவாசிகள். இப்பகுதியில், சுமார் 20 குடியிருப்புகளே உள்ளன. இவர்கள், `தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்’ என்ற பெயரில் சங்கம் அமைத்து, தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

பொதுவாக, குழுவாக வசிக்கும் மக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தங்களது குடிநீர், மின்சாரம், சாக்கடை வசதி போன்ற தேவைகளை, உள்ளூர் நிர்வாகங்களிடம் கேட்டுப் பெறுவதற்கும், இதர தேவைகளுக்கும் குடியிருப்போர் நலச்சங்கம் அமைத்து, கேட்டுப் பெறுகின்றனர். இதுதவிர, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் விழா, போட்டிகள் நடத்தி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
ஆனால், தென்றல் நகரில் வசிக்கும் குடியிருப்போர், யாரும் செய்யாதவற்றை செய்து, மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர். இங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் போன்றவை வந்தால், அன்றைய தினம் சம்மந்தப்பட்ட அந்த வீட்டில்தான் தடபுடலாம விருந்து சமைத்து, குடியிருக்கும் அனைவருக்கும் வழங்கி, அன்பை பரிமாறி ஆசிகளை பெற்றுக் கொள்கின்றனர். இது, இங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் நாகராஜ் – திலகவதி தம்பதியரின் 25வது திருமண நாள் இன்று (25.06.2023) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குடியிருப்போர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி, விமரிசையாகக் கொண்டாடினர். அதேபோல், இச்சங்கத்தின் பொருளாளராக இருக்கும் வெங்கடேஷ் – ராதா தம்பதியரின் இரட்டை வாரிசுகளான பிரணவ் பாரதி மற்றும் பிரதீப் பாரதி ஆகியோரின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்பட்டது.
வழக்கமாக ஒரு விழா என்றாலே களைகட்டிவிடும் தென்றல் நகர், வெள்ளிவிழா திருமண ஆண்டு மற்றும் இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் என்ற இரு கொண்டாட்டங்களால் விழாக்கோலம் பூண்டது. இருவரது வீட்டில் இருந்தும் அறுசுவை விருந்து, கேக், இனிப்புகள் என்று தென்றல் நகரில் உள்ள அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அக்கம் பக்கம் யார் வசிக்கிறார்கள் என்றே தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத பலர் உண்டு. அதேபோல், குடும்பத்தை எடுத்துக் கொண்டால் அதில் பல கருத்துகள், பல முரண்பாடுகள் இருக்கும். இதனால், நிம்மதியே கேள்விக்குறியாகிவிடும் சூழலில், பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் தென்றல் நகரில் குடியிருப்புவாசிகள் ஒன்றாகக் கைகோர்த்து இத்தகைய வித்தியாசமான விழா கொண்டாடி, சமூகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
இத்தகைய மாறுபட்ட சிந்தனைக்கு பின்னணியில் இருப்பவர், இதன் செயலாளராக இருக்கும் செல்வகுமார். ஒற்றுமையே வலிமை… ஒற்றுமையே மகிழ்ச்சியைத் தரும் என்பதை இந்த சமூகத்திற்கு உரக்கச் சொல்லியுள்ளனர்.
வாழ்த்துகள், தென்றல் நகர் மக்களே!








