கோவையில் ரூ.27 லட்சம் பணத்துடன் கடத்தப்பட்ட காரின் ரகசிய அறையில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணமா ? போலீஸ் எஸ்.பி.அருளரசு நேரில் விசாரணை !!!

கோவை அருகே கொள்ளையர்கள் நடுரோட்டில் விட்டுச்சென்ற காரில் ரூ.1 கோடி சிக்கியது. அது ஹவாலா பணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம்( வயது 50 ). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தனது காரில் கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டு இருந்தார். காரை டிரைவர் சம்சுதீன்(42) என்பவர் ஓட்டி வந்தார். அவர்களது கார் கோவை நவக்கரை அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் அப்துல் சலாமின் காரை வழி மறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

மேலும்,அந்த கும்பல் அப்துல் சலாமையும், அவரது டிரைவரையும் தாக்கி,கீழே தள்ளிவிட்டு காரையும், கடத்திச் சென்றனர். அவர்களது 2 செல்போன்களையும் பறித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை-சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே அப்துல் சலாமின் கார் கேட்பாரற்று நின்றது தெரியவந்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரை மீட்டனர். இந்நிலையில் கோவை பேரூர் பச்சாபாளையம் சாலை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே கைப்பற்றிய கார் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது.

 

அங்கு அப்துல் சலாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது, அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது,காரின் பின் இருக்கைக்கு கீழே அமைக்கப்பட்டு இருந்த ரகசிய அறையில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

மேலும்,அந்த பணத்துக்கு அப்துல்சலாமிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் பணத்தை போலீசார் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

 

மேலும்,இந்த கொள்ளை சம்பவம் நாடகமா? என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கை போலீஸ் எஸ்.பி.அருளரசு நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply