பொது முடக்க விதியை மீறி மாட்டிக்கொண்ட நடிகர் விமல் மற்றும் சூரி..!

பொது முடக்க காலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், பரோட்டா சூரி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வனபணியாளர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நடிகர் விமல், பரோட்டா சூரி நடித்த களவாணி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் இருவரும் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் களவாணித்தனம் தான் அதற்கு காரணம். இருவரும் இணைந்து நடித்த தேசிங்குராஜா, புலிவால் போன்ற படங்களின் காமெடி காட்சிகளும் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தன.

 

இப்படி திரையில் களவாணி தனத்தில் ஈடுபட்ட இருவரும் நிஜத்தில் அப்படி செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கொரொனா காலம் என்பதால் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு செல்வதற்கு தற்போது கடும் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் விமலும் பரோட்டா சூரியும் கடந்த வாரம் கொடைக்கானல் சென்று தங்கியிருந்து தடைசெய்யப்பட்ட ஏரியை ஒட்டி அடர் வனபகுதிக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது.

 

அங்கு சென்றவர்கள் ஏரியில் மீன் பிடித்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்து அபராதம் விதித்து இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களின் அடிப்படையில் மகேந்திரன் என்பவர் இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

 

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் நடிகர்கள் விமல், பரோட்டா சூரி எப்படி கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வந்தனர்? தடை செய்யப்பட்ட வனப்பகுதியின் வழியாகச் சென்றது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


Leave a Reply