தமிழகத்தில் எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. எத்தனை திறக்கப்படாமல் இருக்கின்றன என்ற விவரத்தை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்து அறநிலையத்துறை தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜரானார். அப்போது பணியில் ஈடுபட்ட பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கி விட்டதாகவும் மற்றவர்கள் அரசு ரேஷன் கடை மூலம் வழங்கும் உதவித் தொகையை பெற்று இருக்கிறார்கள் என்பதால் தனியாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன? எத்தனை திறக்கப்படாமல் இருக்கின்றன? இரு வகைகளிலும் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? என்ற பட்டியலை இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.