தமிழகத்தில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகள் குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரொனாவை முழுவதும் விரட்ட முடியும் என்று கூறினார். அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும் பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூறினார்.
கீழ்பவானி கால்வாயை 985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி தொடங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி திமுக போராட்டம் நடத்துகிறது என குற்றம் சாட்டினார். உரிய முறையில் மின்சார கணக்கீடு நடைபெறுவதாக அவர் கூறினார்.
கோவையில் பெரியார் சிலையை அவமதித்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதற்கிடையில் எடப்பாடி பகுதியை மாவட்டம் ஆக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற தொழில் துறையினருடன் கூட்டத்தில் தமிழக அரசு கடுமையான நிதிச் சுமையில் உள்ளதாகவும், தொழில் துறையினருக்கு போதிய உதவிகளை அரசு செய்யும், ஜவுளித் துறையினர் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.