கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.8.80 கோடிக்கு மது விற்பனை — மாவட்ட மேலாளர் ( டாஸ்மாக் ) ஷாஜூதீன் தகவல் !!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அமலில் உள்ளது.இருப்பினும் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அத்தியாவசியக் கடைகளுடன்,மேலும் பல கடைகள் நேரக்கட்டுப்பாட்டுடனும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.

 

இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.ஆனால், மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

 

அதன்படி, நேற்று வயது வாரியான நேரக்கட்டுப்பாடுகளுடன் சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 1,700 கடைகளில் விற்பனை செயல்பட்டன.

கோவை மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.இதில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு ( containment area ) பகுதிகளில் உள்ள 44 கடைகள் மட்டும் செயல்படவில்லை.மீதமுள்ள 115 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது.

 

மதுப்பிரியர்கள் போதுமான சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் மதுக்கடைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டும்,கடையை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் நீதிமன்ற ஆணையை பின்பற்றி செயல்பட்டன.

 

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் சமூக விலகல் முறையாக பின்பற்றப்பட்டு விற்பனை நடைபெற்றது.சில இடங்களில் சமூக விலகல் என்றால் என்ன ? என்பது போல் மதுப்பிரியர்கள் முறையாக சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஊரடங்கினால் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் நேற்று திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்ற நிலையில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் சில கடைகளில் பல மணி நேரம் காத்திருந்து மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

 

இந்நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.8.80 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கோவை மாவட்ட மேலாளர் ( டாஸ்மாக் )ஷாஜூதீன் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.8.80 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே பெரும் விவாதப்பொருளாய் மாறியுள்ளது.


Leave a Reply