அரசின் விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகம் முழுவதும் ரேஷனில் அடுத்த மாதமும் இலவசமாக பொருட்களை பெறலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். கொரொனாவை எதிர்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

 

ஏப்ரல், மே மாதங்களை போலவே அடுத்த மாதமும் ரேஷனில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் தொடரும் நிலையில் தமிழகத்தில் பசியால் யாரும் வாடக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு செயல்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

 

அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் ரேஷனில் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக பெறலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சுமார் 36 லட்சம் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளதாக கூறியவர் கொரொனா தடுப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டுவதாகக் கூறினார்.

50 பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் சுமார் 12,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதாக கூறிய முதல்வர் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

கொரொனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம், ஊட்டச்சத்து உணவுகள், விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி கொரொனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மக்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Leave a Reply