சந்தேகத்தால் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தன்னிடம் சொல்லாமல் உறவினர் பெண்ணின் பிரசவத்திற்கு சென்ற மனைவியை கணவன் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது. காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? மருத்துவமனையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த மாரியம்மாவை அவரது கணவர் நடுரோட்டில் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

 

திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆன பின்னும் மனைவி மீது கணவனுக்கு ஏன் சந்தேகம் ஏற்பட்டது? சந்தேகம் கொலையில் முடிந்தது எப்படி? மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் 42 வயதான விவசாய கூலித்தொழிலாளி விஜயகுமார். இவரது மனைவி 38 வயதான மாரியம்மாள். இந்த தம்பதிக்கு 17 வயது மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

மாரியம்மா கிராமத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். குடிக்கு அடிமையான விஜயகுமார் எப்போதும் குடித்துவிட்டு தன் மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபடுவார். ஊரடங்கு நேரத்திலும் கள்ளச் சாராயம் குடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை வீட்டில் படுத்து விட்டார். விஜயகுமார் திடீரென பக்கத்து வீட்டு உறவுக்காரப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து உதவிக்குச் சென்ற மாரியம்மாள் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து ஊருக்கு திரும்பி வந்த பேருந்து வசதி இல்லாததால் மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த மாரியம்மாள் புதன்கிழமை காலை வீடு திரும்பியுள்ளார்.

இதற்கிடையில் போதை தெளிந்து இரவு முழுவதும் மனைவியை தேடிய விஜயகுமார் மனைவியை காணாததால் ஆத்திரத்தில் இருந்தார். விடியற்காலை மனைவி நடந்து வருவதை பார்த்த விஜயகுமார் நடந்தது என்ன என்று கேட்காமல் அருகிலிருந்த கட்டையை எடுத்து மாரியம்மாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் மாரியம்மாள் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்திரத்தில் என்ன செய்கின்றோம் என தெரியாமல் கணவன் மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply