கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும் பல நாடுகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்து நம்பிக்கையை விதைக்கின்றன. ஆஸ்திரேலியா வெற்றிகரமாக கொரொனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மார்ச் மாதம் 28ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் புதிதாக தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 460 . மே மாதம் ஒன்றாம் தேதி புதிதாக தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை வெறும் 16 .

 

ஒரு மாத காலத்தில் மிகப்பெரிய அளவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா. முதல்கட்டமாக சீனாவில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே தடைவிதித்த ஆஸ்திரேலியா பின்னர் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தடையை நீட்டித்தது. ஆஸ்திரேலியாவில் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் ரூபி பிரின்சஸ் சொகுசு கப்பல்.

 

இந்த கப்பலில் இருந்த 2,600 பேர் எந்த பரிசோதனையும் இல்லாமல் சிட்னி நகரில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மட்டும் 600 பேருக்கு கொரொனா பாதிப்பு இருந்தது. மார்ச் மாத இறுதியில் மத வழிபாட்டுத்தலங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டன. இது தவிர கொரொனா பரிசோதனைகளையும் அரசு தீவிரப்படுத்தியது.

 

சுகாதார பணியாளர்கள், வயதானவர்கள் ஹாட்ஸ்பாட் என அறியப்பட்ட பகுதிகளில் வசிப்போர் என அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த தொடர் நடவடிக்கைகள் வைரஸ் பாதிப்பை பெருமளவில் குறைத்தது. தற்போதைய நிலையில் குயின்ஸ்லாந்து தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக புதிதாக யாருக்குமே பாதிப்பு ஏற்படவில்லை.

 

எனவே சில மாகாணங்கள் தாமாக கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன. மேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 92 பேர் வைரசால் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர்.


Leave a Reply