தமிழகத்தின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 10 சென்டி மீட்டரும், திருமையம், காரைக்குடியில் 9 சென்டிமீட்டர், தாமரை பாக்கத்தில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கரூர், மாவட்டம் குளித்தலை அருகே இடி மின்னலுடன் சூறைக் காற்று வீசியதில் 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் ஆகியன.

 

குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வாழைத்தார்கள் வெட்டப்படாமல் இருக்கும் நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் சூறாவளி காற்று வீசியதில் மருது ராஜேந்திரன், கூடலூர், கணேசபுரம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.


Leave a Reply