“கொரோனாவுக்கு கை தட்டுவது, டார்ச் லைட் அடிப்பது தீர்வல்ல!!” பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க கை தட்டுவதும், டார்ச் லைட் அடிப்பதும் தீர்வாகாது என பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல நாடுகளும் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி 3 முறை நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி உரையாற்றும் போதும், முக்கிய அறிவிப்புகளை வெளியிடப் போகிறார் என நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 

ஆனால், முதல் முறை உரையாற்றும் போது நாட்டு மக்கள் அனைவரும் ஒரு நாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறும், கொரோனாவுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கை தட்டி அன்பை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

 

இரண்டாவது முறை உரையாற்றும் போது, கொரோனாவுக்கு எதிரான போரில், நாட்டு மக்களின் உயிர் தான் முக்கியம் எனக் கூறிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் இந்த ஊரடங்கால் பாதிக்கப்படுவோருக்கு ஒரு தீர்வையும் பிரதமர் மோடி தனது உரையில் கூறாததால் எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சனங்களை முன்வைத்தன.

இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று காலை உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை மதித்து , மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைத்ததற்கு நன்றி என்றார். அத்துடன், 5-ந் தேதி இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் மின் விளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது மொபைல் டார்ச் லைட்டை அடித்து ஒளி பாய்ச்சி, கொரானாவுக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

கொரோனாவுக்கு எதிராக விளக்கை ஏற்றி அல்லது டார்ச் அடித்து ஒளி பாய்ச்சுங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், கைகளை தட்டுவதோ, டார்ச் லைட் அடிப்பதோ கொரோனாவுக்கு தீர்வாகாது.கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் தேவையான இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


Leave a Reply