தமிழகத்தில் இன்றும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! 2 நாளில் எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்ததால் பீதி!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo :


தமிழகத்தில் இன்றும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் மட்டும் 4 மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக இருந்த நிலையில் நேற்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.

 

திடீரென இந்த எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணம் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கும் இந்த வைரஸ் தொற்று இருந்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது.இந்த மாநாட்டில் பங்கேற்ற 515 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் 80 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.

மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்ற 616 பேர் பற்றி அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி, டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலரும் இன்று தாமாகவே முன்வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட நிலையில், அவர்களில் பலருக்கும் வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

 

இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் மொத்தம் 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தின் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

தமிழகத்தில் மொத்தம் 77,330 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுகண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 17 பரிசோதனைக் கூடங்கள் செயல்படுகின்றன என்றும் தெரிவித்த பீலா ராஜேஷ், டெல்லி செல்லாத மற்றவர்களும் தங்களுக்கு கொரோனா தொற்று சந்தேகம் இருக்கும் பட்சத்தில் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் 4 மடங்காக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரை, நெல்லை, ஈரோடு, கேலம் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று பாதித்தோர் வசித்த பகுதிகளை சீல் வைத்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply