டெல்லியிலிருந்து கோவை வந்த 82 பேரை கண்டுபிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருப்பதாக ஆட்சியர் கு.ராசாமணி தகவல் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறப்பு , திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்பவர்கள் அனுமதி கேட்டு ஆட்சியரிடம் கடிதம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட காரணத்தை தவிர மற்ற காரணங்களுக்காக வர வேண்டாம் என அவர் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி தமிழக முதல்வர் கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது எனவும், அவர்கள் வீட்டில் தனித்திருக்க வேண்டிய நிலை உள்ளதை அனைவரும் புரிந்து நடக்க வேண்டும் என்றார்.

 

மேலும்,கொரோனா தொற்று ஒருவருக்கு இருந்தால் அவருடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருப்பவர்களுக்கும் பரவும் என்பதை அனைவரும் தெரிந்துள்ளனர். இருந்தாலும் கவனமின்மையால் அஜாக்கிரதையாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

மேலும், உக்கடம்,மேட்டுப்பாளையம், காந்திபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்களின் வசதிக்காக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தை மட்டுமில்லாமல் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் வாங்குவதற்கு அரசு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும் எனவும் , நிறைய பேர் வருவதை தவிர்க்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும்,டெல்லி சென்று வந்த 82 பேர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களில் 41 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார்.சமூக வலைதளங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். கோவை மாவட்டத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் , தவறான தகவலை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கையுடனும் , கண்டிப்புடனும் சொல்வதாக ஆட்சியர் தெரிவித்தார்.

 

மேலும் , கோவை மாவட்டத்தில் 250 சுகாதார பணியாளர்கள் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகின்றனர்.100% கொரோனா பரவலை தடுக்க , ஒரு மருத்துவ பணியாளருக்கு தினமும் 50 வீடுகள் என 250 சுகாதார பணியாளர்கள் கடந்த மூன்று தினங்களாக சளி, காய்ச்சல் , தொண்டை அடைப்பு இருக்கிறதா என கணக்கெடுத்து வருவதாக கூறினார்.அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும், வாங்கவும் வியாபாரிகள் , சில்லறை வணிகர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

மேலும் , அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் வாகனங்களை பயன்படுத்தவும், வேண்டுகோள் விடுத்தார். திருமணம், மருத்துவம், இறப்பிற்காக வெளியூர் செல்பவர்களுக்கு தற்போது அனுமதி கடிதம் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Leave a Reply