மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னாகும் தெரியுமா? கே.பி.ராமலிங்கத்தின் கட்சிப்பதவி அதிரடியாக பறிப்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை அவசியமற்றது எனவும், பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடியும் சிறப்பாக செயல்படுவதாகவும் ஏகத்துக்கும் புகழ்ந்த திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

 

சொரோனா பாதிப்பு தமிழகத்திலும் வேகமாக பரவி வருவதையடுத்து, அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் எனவும், அனைத்துக் கட்சிகளையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முன்வர வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் மு.க.ஸ்டாலினின் இந்த கோரிக்கைக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.பி.யும் தற்போது விவசாய அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளவருமான கே.பி.ராமலிங்கம் தேவையற்ற கோரிக்கை என விமர்சித்திருந்தார்.

மேலும்,கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய சூழலில் மக்கள் நலன் கருதி, வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பது, முதல்வரின் ஆளுமை திறனை காட்டுகிறது. அனைத்து தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டுகிறோம்.

 

இந்த இக்கட்டான கட்டத்தில் கலெக்டர்கள், உயரதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறை. அதைவிடுத்து வீடியோ கான்பரன்சில் அனைத்து கட்சி தலைவர்களோடு ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றதாக கருதுகிறேன் என கே.பி.ராமலிங்கம் கூறியிருந்தது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுக தலைமைக்கு எதிராகவே கே.பி.ராமலிங்கம் கருத்து கூறிய நிலையில், திமுக மாநில விவசாய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Leave a Reply