புதுச்சேரியில் நாளை முதல் ரூ.2 ஆயிரம் நிவாரணம்..! தமிழகத்தில் ரூ.1000 வழங்குவதிலோ திடீர் சிக்கல்?

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுச்சேரியில் ரேசன் கார்டுதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலும் ஏப் 2-ந் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரேசன் கடை ஊழியர்கள் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் திட்டமிட்டபடி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தாவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் முடங்கியுள்ள ஏழை மக்கள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் இந்த பாதிப்பை ஈடு செய்யும் வகையில் பல்வேறு மாநிலங்களும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.

தமிழகத்தில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1000 மற்றும் ஒரு மாத ரேசன் பொருட்கள் இலவசம் என்றும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாயும் லழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதே போல், புதுச்சேரியிலோ அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் என அறிவித்திருந்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி, நாளை முதல் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஏப்ரல் 2-ந் தேதி முதல் ரேசன் கடைகளில் ரூ.1000 வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரேசன் கடை பணியாளர் சங்கமோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரூ.1000 பணத்தை வாங்க மொத்தமாக மக்கள் ரேசன் கடைகளை மொய்த்துவிடுவார்கள். இதனால் ரேசன் கடை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று அபாயம் உள்ளது.

 

இதனால் 40 ஆயிரம் பணியாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகே பணிபுரிய முடியும். தேவையானால் அவரவர் வங்கிக்கணக்கில் அரசு வரவு வைக்கட்டும். இதை மீறி எங்களை கட்டாயப்படுத்தினால் நீதிமன்றம் செல்லத் தயங்க மாட்டோம் என ரேசன் கடை பணியாளர் சங்கத் தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார். இதனாலேயே வரும் 2-ந் தேதி ரேசன் கடைகளில் ரூ.1000 வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply