தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..!முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo :


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

 

தமிழகத்தில் நேற்று வரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 67 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டில் 10, சென்னை 4, மதுரை 2, திருவாரூரில் ஒருவர் என 17 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொநோனாவுக்கு இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில், 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 121 பேரின் ஏத்த மாதிரி சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 1.5 கோடி முகக் கவசங்கள் மற்றும் 25 லட்சம் என் 95 முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு தற்போதைய ஒரே மருந்து தனிமைப் படுத்துதல் தான். எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம்.

 

மக்களைக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாநில தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடகைதாரர்கள் பிரச்னை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Leave a Reply