உஷார் மக்களே..!ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன தண்டனை தெரியுமா..? மருத்துவமனைகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo :


ஊரடங்கு உத்தரவை மீறிபவர்களை பிடித்து மருத்துவமனைகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இதனால் இனி 15 நாட்களுக்கு அநாவசியமாக ஊர் சுற்றுபவர்கள் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

 

கொரோனா வைரஸ் என்னும் ஆட்கொல்லி வைரஸ் நோய்க்கு மருந்து இல்லை என்பதால், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, மக்கள் பொது வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதே தீர்வு என மருத்துவர்களே கூறுகின்றனர். இதனாலேயே இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று அறிகுறி சிலருக்கு தென்படத் தொடங்கியதுமே முன்னெச்கரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களை வீட்டை விட்டு அநாவசியமாக வெளியேறக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா வைரசின் விபரீதம் புரியாமல் மக்கள் வெளியில் நடமாடுவதைக் கண்ட காவல் துறையினர் முதலில் அன்பாக எச்சரித்துப் பார்த்தனர். பின்னர் தோப்புக்கரணம் போடச் செய்வது, முட்டிக்கால் போட வைப்பது, கொரோனா விழிப்புணர்வு பற்றி உறுதிமொழி ஏற்கச் செய்வது என பல விதங்களில் நூதன தண்டனையும் கொடுத்துப் பார்த்தனர். அப்படியும் கேட்காதவர்களை சரமாரியாக லத்தி அடி கொடுத்தனர். பின்னர் வழக்கும் போட்டனர். தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்தும் பார்த்தாலும் இன்னும் பலர் திருந்தியதாக தெரியவில்லை.

 

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதன்படி ஊரடங்கை மீறுபவர்களை பிடித்து, கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவது போல 14 நாட்களுக்கு அவர்களை அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அதே போல் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது. இடம் பெயர்ந்து பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply