“வெளி மாவட்ட எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம்!!” கொறடா உத்தரவு பிறப்பித்தது திமுக!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானோ அச்சுறுத்தல் காரணமாக சென்னை தவிர்த்து பிற மாவட்ட எம்எம்ஏக்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என திமுக கொறடா சக்ரபாணி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

 

கொரானோ அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க பல்வேறு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒரு நாள் மக்கள் ஊரடங்கை அனுசரித்து வீட்டிற்குள் இருந்தபடி வெளியில் வரவில்லை.

 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைககள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 9-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என பெரும்பாலானவைகளை மூட உத்தரவிட்ட நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், சட்டப்பேரவையை ஒத்தி வைக்க சபாநாயகர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்ததால், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சட்டப் பேரவையில் ஆவேசம் காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவையில் இப்படி கூட்டமாக அமர்ந்திருப்பது சரியா? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து 2 நாட்களாக அலுவல் ஆய்வுக்குழு கூடி வரும் மார்ச் 31-ந் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில், கொரானோ அச்சுறுத்தல் காரணமாக இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் வெளி மாவட்ட எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். அவரவர் தொகுதிகளில் கொரானா தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுங்கள் என மு.க.ஸ்டாலின் அறிவுருத்தியிருந்தார். இந்நிலையில், வெளி மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் யாரும் சட்டப் பேரவைக்கு வரக்கூடாது என அக்கட்சியின் கொறடா சக்ரபாணி கண்டிப்பான உத்தரவே போட்டுள்ளார். இதனால் மொத்தம் 98 எம்எல்ஏக்களில், இன்றைய சட்டப் பேரவை கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த 7, 8, எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.


Leave a Reply