“நாட்டு மக்களிடம் இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை!” கொரானா தொடர்பாக அதிரடி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா அச்சுறுத்தல் எதிரொலியாக பிரதமர் மோடி இன்றிரவு நாட்டு மக்களிடம் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிரடி அறிவிப்புகள் அவரது உரையில் இடம்பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கையும் , பாதிப்பும் நாளுக்கு நாள் கூடி வருவதால் உலகின் பல்வேறு நாடுகளும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளன. பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்றுநோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் 2.5 லட்சத்தை கடந்துள்ளது. இதில் ஐரோப்பிய இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும், ஈரான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவும் வைரஸ் தொற்றால் அந்நாடுகளில் கடும் பீதி நிலவுகிறது.

 

இதனால், இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு, அவசர நிலை பிரகடனம் என பல்வேறு அவசர உத்தரவுகளை பல்வேறு நாடுகளும் அதிரடியாக பிறப்பித்து வருகின்றன. மலேசியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொரானாவின் தாக்கம் இந்தியாவிலும், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது இதுவரை 155 பேருக்கு கெரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

 

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தியேட்டர்கள், மால்கள், பொழுதுபோக்கு சுற்றுலா இடங்கள், கோவில்கள் என மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க பல்வேறு கடுமையான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அநாவசிய வெளியூர் பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமானம்,பேருந்து, ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை மிக மிக குறைந்துவிட்டது. பரபரப்பாக காணப்பட்ட இடங்கள் எல்லாம் வெறிச்சோடி, நாடு முழுவதுமே ஒரு வித அச்சத்தை கொரானாவின் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

 

கொரானாவால், நாட்டில் ஒரு இக்கட்டான அசாதாரண சூழல் நிலவும் நிலையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையில் கொரானா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கியமான அறிவிப்பு இடம் பெறலாம் என கூறப்படுவதால், பிரதமர் மோடியின் உரை பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Leave a Reply