விருதுநகர் ஆணை குழாய் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை கப்பலூரை சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்த மணிகண்டன் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஏஜென்டாக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே 6 மாதங்களுக்கு முன்பு தனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் அவருக்கு உதவியாக இருக்க பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார் ஜோதிலட்சுமி. செல்வலட்சுமி நகரை சேர்ந்த தூரத்து உறவினரான கார்த்திக் என்ற இளைஞர் அவ்வப்போது வீட்டிலிருந்து ஜோதி லட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு நெருக்கமான பழக்கமாக மாறியதாக கூறப்படுகிறது.
தந்தை உடல்நிலை சரியான பின்பு வீடு திரும்பியும் கார்த்தியுடன் பேசி பழகி வந்ததால் கணவர் மணிகண்டனுக்கு விஷயம் தெரிய வந்துள்ளது. இதனால் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த வாரம் ஜோதிலட்சுமி தனது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். மணிகண்டனும் விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இச்சூழலை சாதகமாக்கி கொள்ள நினைத்த கார்த்திக் ஜோதிலக்ஷ்மியிடம் தன்னுடன் வரும்படி கூறியுள்ளார். கணவர் இருக்கும் பொழுது எப்படி உன்னுடன் வாழ முடியும் என ஜோதிலட்சுமி பதில் கூற மணிகண்டனை தீர்த்துக் கட்டுவது என முடிவு எடுத்துள்ளார் கார்த்திக்.
அதன்படி திங்கட்கிழமை அன்று விருதுநகருக்கு நண்பர்களுடன் சென்று கார்த்திக் மணிகண்டனை சந்தித்து ஜோதிலக்ஷ்மியின் தாயார் சமரசம் பேச வரச் சொன்னதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் திருமங்கலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அன்றைய தினம் இரவு தனது தாயாருக்கு போன் செய்த மணிகண்டன் அம்மா என இருமுறை கதறியபடி கூறிவிட்டு இணைப்பை துண்டித்து உள்ளான்.
சற்று நேரத்தில் ஜோதிலட்சுமியின் தாயார் மணிகண்டனின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகனை கார்த்திக் கொலை செய்து விட்டதாக தன்னிடம் சொன்னதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன பெற்றோர் மதுரை ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஜோதிலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிறிய அறை முன்பு கத்திக்குத்து காயங்களுடன் மணிகண்டனின் சடலம் மீட்கப்பட்டது. தலைமறைவாக உள்ள கார்த்திக் ஒரு சிலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.