ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், 5 வயது சிறுவனை கார் டிரைவர் சீட்டில் ஜம்மென்று அமர வைத்து பரபரப்பான சாலையில் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்த பகீர் சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது. இதைக் கண்ட போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் காரை விரட்டிச் சென்று மடக்கிய போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்பான பரபரப்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வைர லாகும் வீடியோ
இராமநாதபும் நகரில் மூன்றெழுத்து பெயர் கொண்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்தப் பயிற்சிப் பள்ளியின் வாகனத்தில் 5 வயது சிறுவனை டிரைவர் சீட்டில் அமர வைத்து ஓட்டப்பழகிக் கொடுத்துள்ளனர். இராமநாதபுரம் – திருச்சி நெடுஞ்சாலையில், கேணிக்கரை முதல் அரண்மனை வரை நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில் சின்னஞ்சிறுவன் ஒருவனுக்கு வாகனம் ஓட்ட பழகிக் கொடுப்பதை, பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே தனது இரு சக்கர வாகனத்தில், சிறுவன் ஓட்டிச் சென்ற பயிற்சிப் பள்ளி வாகனத்தை விரட்டிச் சென்றார்.
இதைக் கண்ட பயிற்சிப் பள்ளியினர், சுதாரித்து சிறுவனை டிரைவர் சீட்டிலிருந்து அப்புறப்படுத்தி வாகனத்தை படு வேகமாக ஓட்டிச் சென்றனர்.காவலரும் படு வேகமாகக் சென்ற வாகனத்தை பல கி.மீ. துரத்திச் சென்ற ஒரு வழியாக மடக்கினார். சிறுவனை கார் ஓட்டச் செய்தது குறித்து காவலர் கேள்வி கேட்க, இல்லவே இல்லை என ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியினர் சாதிக்க கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசி வரை வாகனத்தை சிறுவன் ஓட்டவில்லை என்றே சாதிக்க, காவலர் ஆத்திரத்தில் கத்திக் தீர்த்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும்
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, நமது குற்றம் குற்றமே புலனாய்வு இதழ் செய்தியாளர் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது பேசிய அந்தப் பள்ளிநிர்வாகி ஒருவர், தங்கள் வாகனத்தை நண்பர் ஒருவர் எடுத்துச் சென்றதாக மழுப்பலாகப் பேசி தொடர்பை துண்டித்து விட்டார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து, நம்மை தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை க்ரைம் பிரிவு ஏட்டு ராஜ்குமார் என்று கூறி, தாம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகியின் தம்பி என்றும் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேசிய அவர் செய்தி எதுவும் வெளியிட வேண்டாம் என கெஞ்சுவது போல் முதலில் பேசினார். ஆனால் பின்னர் அப்படி நடக்கவேயில்லை. ரெண்டு தரப்பிலும் தீர விசாரிக்கணும் என்றும் மிரட்டும் தொனியில் நமது செய்தியாளரிடம் மீண்டும் மீண்டும் பேசினார். ஆனால், சிறுவன் ஓட்டிச் சென்றதை தாம் கண்ணால் பார்த்ததாலேயே, அந்த வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கியதாக போக்குவரத்து காவலர் அடித்துச் சொல்கிறார்.

சின்னஞ்சிறு 5 சிறுவனை கார் ஓட்டச் செய்வதும், அதனால் ஏற்படப் போகும் விபரீத விளைவுகள் பற்றி சிறிதும் கவலை கொள்ளாத இப்படிப்பட்ட வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்று என்பதே அனைவரின் கவலை.