போராட்டம் நடத்திய சென்னை பல்கலை., மாணவர்கள்..! நள்ளிரவில்! அப்புறப்படுத்திய போலீஸ்!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை, நள்ளிரவில் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முன்தினம் முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் வளாகத்தை வெளியேற மறுத்த மாணவர்களில் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தனர். இதனால் வெளியில் உள்ள மாணவர்கள் உள்ளே சென்று விடாதவாறு பல்கலைக் கழகத்தின் வெளிக் கதவு பூட்டப்பட்டது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலும், உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவர்களை நேற்று நேரில் சந்திக்க வந்தார். அவருக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கேட்டுக்கு வெளியில் நின்றபடி, போராட்டம் நடத்தும் மாணவர்களைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து விட்டுச் சென்றார்.

 

இந்நிலையில், நள்ளிரவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து மாணவர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். ஆனால் மாணவர்களோ, வெளியேற மறுத்ததுடன், எதிர்ப்பு கோஷமிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 மாணவர்களையும் கைது செய்வதாகக் கூறி, வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி திருவல்லிக்கேணி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

 

ஆனால், மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் நள்ளிரவிலேயே அனைவரையும் விடுவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.


Leave a Reply