தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லிக்கு பயணமாகியுள்ளார். ஓ.பி.எஸ்.சின் திடீர் டெல்லி பயணத் திட்டம் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (19-ந்தேதி) டெல்லிக்கு பயணமாக உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த 4 நாட்களுக்கு முன்னரே வெளியானது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லிக்கு பயணமாகியுள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறும் மாதாந்திர ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திலும், அடுத்தாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பான மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்திலும் ஓ.பி.எஸ். பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19-ந் தேதி டெல்லி செல்கிறார் என்ற அறிவிப்பு வெளியான பின்னரே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்லும் திட்டம் திடீரென முடிவானது ஏன் என்பது தான் கோட்டை வட்டாரங்களிலும், அதிமுகவிலும் பரபரப்பாகி, பல்வேறு யூகங்களும் பரவிக் கிடக்கிறது.
இதற்குக் காரணம், மத்திய அமைச்சரவையில் தனது மகன் ஓ.ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவியைப் பெற்று விட ஓ.பி.எஸ்., கடந்த 6 மாதமாகவே தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது அம்முயற்சி ஒரு வழியாக கனிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் அவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ஆரம்பம் முதலே ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் எடப்பாடியும், கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலரும் முட்டுக்கட்டையாக இருந்து வருவது தெரிந்த சங்கதி. இப்போதும் டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி, மத்திய அமைச்சர் பதவிக்கு இடையூறாக இருந்து விடுவாரோ? என்று ஓ.பி.எஸ்.தரப்புக்கு சந்தேகமாம். இதனால் டெல்லி பாஜக தலைவர்களையும், பிரதமர் மோடியையும் சந்திக்கும் திட்டத்துடனே, ஓ.பி.எஸ் திடீரென டெல்லி பயணத் திட்டம் போட்டதாக அதிமுகவில் ஒரு தரப்பினர் கிசுகிசுக்கின்றனர்.