தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்க்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷரஃப்.

 

ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்திற்கு வந்த இவர் 2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப் படுத்தினார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த நவாஸ் ஷெரீப் 2003 ஆம் ஆண்டு முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார்.

 

2014 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அந்த ஆண்டு அதற்கான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. வழக்கின் விசாரணையில் இழுத்தடிக்கப்பட்டு கொண்டே இருக்க 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முஷரப் மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாய் சென்றார்.

 

கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதியுடன் இந்த வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நவம்பர் 28ஆம் தேதி தீர்ப்பு அறிவிப்பதாக இருந்தது. ஆனால் முஷரப் தரப்பில் தனது தரப்பு வாதங்களை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 5ஆம் தேதி வரை தனது வாதங்களை பதிவு செய்ய முஷரப்க்கு அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கெடு முடிவடைந்ததால் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


Leave a Reply