சினிமா மேடைகளில் ரஜினி அரசியல் பேசியது இல்லையா?

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து இருக்கிறார் ரஜினி. தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினி பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய பல்வேறு மொழிகளில் பதில் அளித்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினி அரசியல் பேசுவதற்கு உகந்த இடமில்லை என்று தெரிவித்தார்.

 

இந்த விவகாரம் தான் இப்போது பேசு பொருளாக உள்ளது. இது அரசியல் மேடை இல்லை ஆகையால் நாட்டில் நடக்கும் எந்த விஷயங்கள் குறித்தும் இங்கு கருத்து தெரிவிக்க மாட்டேன் என விடாப்பிடியாக கருத்து தெரிவிக்கும் ரஜினி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து பேசியது அனைத்தும் அரசியல் சார்ந்தது என்பதை மறந்து விட்டாரா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 60 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணிப்பதை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று எடப்பாடிபழனிசாமி முதல்வராவார் என அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினி பேசிய பேச்சு அதிமுக அமைச்சர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது.

 

பாட்ஷா பட வெற்றி விழாவில் கோவை குண்டுவெடிப்பு குறித்து பேசியது தர்பார் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக்கதைகள் மூலம் அரசியல் பேசியது, காப்பான் இசை வெளியீட்டு விழாவில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசியது என சினிமா மேடைகளை அரசியல் பேச்சுக்கு தொடர்ந்து பயன்படுத்தியே வந்துள்ளார் ரஜினி.


Leave a Reply