திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.
திருக்கார்த்திகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தான். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா, கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கார்த்திகை தினமான இன்று மலை யுச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோயிலின் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை சரியாக 6 மணிக்கு, கோயிலின் பின்புறம் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றுவதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டிருந்தது. மகா தீபம் ஏற்றுவதைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர்.தீபம் ஏற்றியவுடன் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.