கட்சியை பதிவு செய்த நிலையிலும், அமமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என கைவிரித்துள்ளது. இதனால் நீதிமன்றத்தை நாடப் போவதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் கட்சியை தொடங்கியது முதலே, அந்தக் கட்சிக்கு சின்னம் பெறுவது சிக்கலாகவே உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு வெற்றி தேடித் தந்த குக்கர் சின்னம் மிகவும் பிரபலமாகி விட்டது. இதனால் கடந்த மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு இந்த குக்கர் சின்னத்திற்காக பெரும் சட்டப் போராட்டம் நடத்தினர். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணம், அமமுக கட்சியை இன்னும் பதிவே செய்யவில்லை என்றது.அத்துடன் குக்கர் சின்னத்தை சுயேட்சைகளுக்கான சின்னங்கள் பட்டியலிலும் சேர்த்து விட்டது தேர்தல் ஆணையம் .
இதனால் அமமுக கட்சியை பதிவு செய்யும் பணியில் தீவிரம் காட்டப்பட்டு, கடந்த சனிக்கிழமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அங்கீகாரம் பெறப்பட்டது.
இந்நிலையில் கட்சியை பதிவு செய்த ஆதாரத்துடன், அமமுக பொருளாளர் வெற்றிவேல், வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்தனர். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்குமாறும் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், அமமுகவின் கோரிக்கையை நிராகரித்துள்ள மாநில தேர்தல் ஆணையம் ,பொதுச் சின்னம் வழங்க முடியாது என்று இன்று அறிவித்துள்ளது.இது குறித்து அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகையில், கட்சியை அங்கீகாரம் பெறாத கட்சியாக பதிவு செய்திருப்பதால் பொது சின்னம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் கேட்கும் சின்னத்தை பிற பதிவு செய்யப்பட்ட கட்சியினர் கேட்க வாய்ப்புள்ளது என்று கூறிவிட்டனர். இதனால் பொதுச் சின்னம் கேட்டு நீதிமன்றம் செல்வோம் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.