அ.ம.மு.க., அரசியல் கட்சியாக பதிவு ..! பொது சின்னம் கிடைக்கவும் வாய்ப்பு..!! எழுச்சி பெறுவாரா டிடிவி தினகரன்..?

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் அமமுகவுக்கு தனி சின்னம் கிடைக்கும் என்பதால் அக்கட்சியினர் போராடி வருகின்றனர்.

 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், தனி அணியாகப் பிரிந்தார். அவருடன் அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்களும் அணிவகுத்தனர். எனவே நாங்கள் தான் உண்மையான அதிமுக என்ற ரீதியில் டிடிவி தினகரனும், அவரது ஆதரவாளர்களும் தம்பட்டம் அடித்தனர். அதற்கேற்றாற்போல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் களம் கண்ட தினகரன் அமோக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இந்த வெற்றியின் மூலம் ஆளும் அதிமுக தரப்புக்கு மட்டுமின்றி எதிர்க் கட்சியான திமுகவையும் டெபாசிட் இழக்கச் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

 

இதனால் அதிமுக கட்சியும், இரட்டை இலைச் சின்னமும் தங்களுக்கே என உரிமை கொண்டாடிய டிடிவி தினகரன், வழக்கும் போட்டார். ஆனால் வழக்கு இழுத்துக் கொண்டே போன நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, ஜெயலலிதா படத்துடன், கருப்பு சிவப்பு வெள்ளை என அதிமுக கொடி நிறத்தில் புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். பெரிய கட்சிக்குரிய பந்தாவுடன் மாநிலம் முழுவதும் அனைத்து பிரிவுகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து தடபுடலாக எழுச்சியுடன் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். டிடிவி தினகரனின் இந்த எழுச்சியைக் கண்டு தமிழக அரசியல் களம் கூட பரபரப்பானது. டிடிவி தினகரனின் இந்த கெத்தைக் கண்டு ஆளும் அதிமுகவினர் கூட மிரண்டனர் என்றே கூறலாம்.

 

ஆனால், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது, இரட்டை இலைச் சின்னத்தை தங்கள் வசப்படுத்தியது போன்றவற்றால் தினகரனுக்கு நெருக்கடி கொடுத்தது அதிமுக தரப்பு. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே சின்னமாக குக்கர் சின்னம் கொடுக்க விடாமலும் அதிமுக நெருக்கடி கொடுத்தது. இதனால் குக்கர் சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையமும் மறுத்தது. இருந்தாலும், வேறு ஏதாவது பொது சின்னம் வழங்குமாறு தினகரன் போராடினார். ஆனால் அமமுக என்ற கட்சியே இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, பொது சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது. கடைசியில் கட்சியை பதிவு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்ததால், கடைசி நேரத்தில் பரிசுப் பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

ஆனால், 39 மக்களவைத் தொகுதிகள், இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக எதிர்பார்த்த அளவுக்கு சாதிக்க முடியாமல் படுதோல்வியையே சந்தித்தது. இந்த தோல்விக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரிசுப் பெட்டி சின்னமும் ஒரு காரணம் என அமமுகவினர் புலம்பினர். இந்தத் தோல்வியால் அமமுகவும் கலகலத்தது. தங்க தமிழ்ச்செல்வன், பெங்களூரு புகழேந்தி முதல் முக்கிய நிர்வாகிகள் பலரும் அமமுகவில் இருந்து அதிமுக, திமுக கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இருந்தாலும் இன்னும் நம்பிக்கை தளராமல் உள்ள டிடிவி தினகரன், கட்சியை பதிவு செய்து, பொதுச் சின்னம் பெற்று, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுவோம் என கூறி வந்தார்.

 

இந்நிலையில் தான் அமமுக கட்சியை பதிவு பெற்ற கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமமுகவுக்கு பதிவு பெற்ற அரசியல் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் பொது சின்னம் கிடைக்கும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிப்போம் என அமமுகவினர் கூறி வருகின்றனர்.


Leave a Reply