உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் மட்டும் தள்ளி வைப்பு..? – உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் காரசார விவாதம் நடந்தது. புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா? தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக தள்ளி வைக்கப்படுமா என இன்று மாலை தெரிந்துவிடும்.

 

தமிழகத்தில், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற ஊராட்சித் தேர்தல் தேதியை அறிவிக்காமல், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையே, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், வார்டு மறு வரையறை, தொகுதி சீரமைப்பு போன்ற சட்டப்பூர்வ பணிகளை முடிக்காமல் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாததால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மட்டுமின்றி, மொத்தம் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகள் காரணமாக தேர்தல் நடக்குமா ? அல்லது தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து, தேர்தல் பணிகளில் பலரும் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இன்றைய வழக்கு விசாரணை முடிவு குறித்து பலரும் பெரும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் இன்று உச்ச நீதி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். தமிழக தேர்தல் ஆணையம் எந்த நடைமுறைகளையும் முறையாக பின்பற்றவில்லை. வார்டு மறு வரையறை செய்யவில்லை.

 

தொகுதி சீரமைப்பும் செய்யவில்லை என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பிலோ, வார்டு மறு வரையறை செய்த பிறகே தேர்தல் அறிவிக்கப்பட்டது என கூற, திமுக தரப்போ அது உண்மையில்லை.பல ஆண்டுகளுக்கு முன் வரையறை செய்ததை இப்போது செய்தது போல கூறுகிறார்கள் என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக தரப்புக்கும், தமிழக அரசுத் தரப்புக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று தானே ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது என்பதை விளக்கிக் கூறினர். மேலும் புதிய மாவட்டங்களை அவசரமாக பிரித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேர்தலை நடத்த தடை விதிக்க முடியும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 

இதனால் அதிர்ந்து போன தமிழக அரசு வழக்கறிஞர், புதிய மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என யோசனை தெரிவித்து வேண்டுகோள் விடுத்தார். ஆனால் திமுக தரப்பிலோ, 9 மாவட்டங்களில் மட்டுமே தேர்தலை தள்ளி வைத்தால் வீண் குழப்பம் ஏற்படும். எனவே, ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

இதையடுத்து, 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க முடியுமா? என்பதற்கு பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உத்தரவிட்டு, விசாரணையை 2 மணிக்கு ஒத்தி வைத்தார்.

 

இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக தடை வருமா? அல்லது 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் தள்ளிப்போகுமா? என்பது இன்று மாலை தெரிய வரும்.


Leave a Reply