கர்நாடகாவில் எடியூரப்பா கண்டம் தப்புவாரா? 15 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

கர்நாடகாவில் மினி பொதுத் தேர்தல் போல், 15 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7 தொகுதிகளிலாவது பாஜக வென்றால் மட்டுமே, எடியூரப்பா தலைமையிலான அரசு தப்பிப் பிழைக்க முடியும் என்பதால், இந்த இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவில் 2018 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனித்தனியே களம் கண்டன. தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 தொகுதிகளில், பாஜக 104, காங்., 80, ம.ஜ.த., 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கூடுதல் இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற ரீதியில் பாஜக ஆட்சியமைக்க முயற்சித்தது.

 

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கைகோர்த்தது. மஜத வின் குமாரசாமி முதல்வராக்கவும் காங்கிரஸ் முன் வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரியதை ஏற்க மறுத்த, அம்மாநில ஆளுநர், பாஜகவுக்கே அழைப்பு விடுத்தார். அவசர அவசரமாக எடியூரப்பா முதல்வர் பதவியேற்றார். அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தார் ஆளுநர் .

 

இதை எதிர்த்து காங்கிரஸ் – மஜத கூட்டணி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக இரவு முழுவதும் விசாரணை நடைபெற்றது. முடிவில் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம் .

 

இதனால், குதிரை பேரம் நடத்தி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைத்து விடலாம் என்ற எடியூப்பாவின் திட்டம் தவிடு பொடியானது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவியேற்ற 4 நாட்களில் எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

அதன் பின் குமாரசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ் – மஜத கூட்டணி ஒரு ஆண்டை, கடந்த நிலையில், அக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பாஜக குளிர் காய்ந்தது.காங்கிரசின் 14, மஜதவின் 3 எம்எல்ஏக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்ய குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்து ஆட்சியை இழந்தது. மீண்டும் எடியூப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

 

பாஜக ஆட்சி அமைவதற்காக, எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களில் 16 பேர் பாஜகவில் இணைந்தனர் .இதில் தற்போது 15 தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் இடைத்தேர்தலில், கட்சி தாவி வந்த 13 பேர் வேட்பாளர்களாகியுள்ளனர்.

 

இந்த இடைத் தேர்தல், பாஜக அரசுக்கு பெரும் விஷப்பரீட்சையாக அமைந்துள்ளது. தற்போது 15 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்த பின், மெஜாரிட்டிக்கு 112 இடங்கள் தேவை. பாஜகவின் தற்போதைய பலம் 105 .இதனால் 7 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்.

 

இல்லாவிட்டால், இப்போது தனித் தனியாக போட்டியிட்டாலும், மஜத – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த 15 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகள், கர்நாடக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அங்கு வாக்கு எண்ணிக்கை வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது.


Leave a Reply