திருப்பூர் அழகுமலையில் மலையேற்ற பயிற்சியுடன் நடந்த அணி நடைப்பயணம்: 694 சாரண, சாரணியர் பங்கேற்பு

திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி மாவட்ட அளவிலான சாரண – சாரணியர்களுக்கு மலையேற்ற பயிற்சியுடன் கூடிய நீண்ட நடைப்பயணத்தின் ஒரு நாள் முகாம் திருப்பூர் மாவட்டம், பெருந்தொழுவு மற்றும் அலகுமலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் முதன்மை ஆணையருமான ரமேஷ் மேற்பார்வையில் மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் அதனை எதிர்கொள்ளும் விதம் மற்றும் உடல் வலிமை பெறுவதற்காக நடத்தப்பட்ட இந்த முகாமில் 8 அரசு பள்ளிகள் உள்பட 24 பள்ளிகளை சேர்ந்த 694 சாரண, சாரணியர் கலந்து கொண்டனர்.

 

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் காலை 6 மணி முதல் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்று கூடினர். இவர்களை பள்ளி முதல்வர் ஆனந்தி வரவேற்றார். பின்னர் அனைவருக்கும் காலை உணவாக இட்லி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாரண, சாரணியர் பள்ளிவாரியாக 50 பேர்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு அப்பள்ளியில் இருந்து நீண்ட நடைபயணமாக அணியணியாக புறப்பட்டனர். மேகமூட்டத்துடன் இயற்கையான சூழ்நிலையில் நடந்த மாணவர்கள் வழிநெடுக குதூகலத்துடன் எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடியும், பல்வேறு மக்கள் நலத்திட்ட கோஷங்களையும் போட்டவாறு உற்சாகமாக நடந்து சென்றனர்.

அப்போது ரோடுகளில் நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள், செல்லும் வழியில் இருந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும் கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்கள் வழியில் பார்த்த சாரண வழிகாட்டு குறியீடுகள் உள்பட நேரில் பார்த்த பல்வேறு சம்பவங்களை தாங்கள் கொண்டுவந்த நோட்டுகளில் குறிப்பெடுத்துக்கொண்டே வந்தனர். பேரணியானது சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அலகுமலை அடிவாரத்தை அடைந்தனர். அங்கு மாணவர்களை அலகுமலை திருக்கோயில் அறங்காவலர் அறக்கட்டளை குழுவினர் அவர்களை வரவேற்று சிறிதுநேரம் திருமண மண்டபத்தில் தங்க வைத்து ஓய்வு எடுத்தனர்.

 

இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கூட்டத்திற்கு சாரண, சாரணிய இயக்க மாவட்ட தலைமை ஆணையர் ஜான் சாமுவேல் தலைமை தாங்கினார். பல்லடம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல் முன்னிலை வகித்தார். சாரண, சாரணிய மாவட்ட துணை செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி நோய்கள் குறித்து சமூக நல ஊழியர் சுதாமகேஸ்வரி, சத்தான உணவு பழக்கம் குறித்து குமரன் மருத்துவமனை டாக்டர் ஆர்த்தி, குப்பை மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் பேசினார்கள். அப்போது மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

பின்னர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகம் தலைமையில் தீ தடுப்பு குறித்து செயல்விளக்கத்துடன் விளக்கி கூறினார். இதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, கட்டிடத்தில் தீ பிடித்தால் தண்ணீர் பீய்ச்சி எவ்வாறு அணைப்பது குறித்து மாணவர்களை வைத்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

 

இதைத்தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் அலகுமலை உச்சிக்கு ரோடு, காட்டுவழி மற்றும் படிக்கட்டுகளில் பிரித்து சென்று சுமார் 2 கிலோ மீட்டர்,நடைபயணம் மேற்கொண்டு மீண்டும் நடந்தே திரும்பினர். அப்போது சாரல் மழை பெய்ய மாணவர்கள் அதில் நனைந்து ஆனந்தமாக சென்றனர். முடிவில் மாவட்ட அமைப்பு ஆணையர் ஜெயகுமார் நன்றி கூறினார். முகாமில் அதிகபட்சமாக சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளியை சேர்ந்த 80 மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் மத்திய உணவு சாப்பிட்டு சாரண சாரணியர் ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடமும் கலந்துரையாடி பிரியாவிடை பெற்று பிரிந்து சென்றனர்.


Leave a Reply